அரசாணை பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகிறது: முத்துப்பேட்டை தனி வட்டமாக தரம் உயர்த்தப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
By DIN | Published on : 27th June 2018 08:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை தனி வட்டமாக தரம் உயர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாத நிலையில், நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர், மன்னார்குடி வருவாய்க் கோட்டங்களையும், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய வட்டங்களையும் கொண்டு திருவாரூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் 2011-ஆம் ஆண்டில் திருத்துறைப்பூண்டி வட்டத்துக்குள்பட்ட முத்துப்பேட்டையை தனி வட்டமாகப் பிரித்து அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், மன்னார்குடி வட்டம் பாலையூர் குறு வட்டத்தில் உள்ள 15 வருவாய் கிராமங்களையும், முத்துப்பேட்டை வருவாய் சரகத்தில் உள்ள 18 கிராமங்களையும் உள்ளடக்கியதாக முத்துப்பேட்டை வட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்காக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், சமூக நலத் திட்ட தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், சரக வருவாய் ஆய்வாளர்கள் என 41 பணியிடங்களும், வட்டாட்சியர்அலுவலகம் கட்ட ரூ. 2 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரமும், வட்டாட்சியர் குடியிருப்பு கட்ட ரூ.19 லட்சத்து 12 ஆயிரமும் நிதி ஒதுக்கீடு கோரி 20.2.2013-இல் வருவாய் நிர்வாக ஆணையருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் கருத்துரு அனுப்பி உள்ளார்.
ஆனால், அதற்கு பின்னர் அரசாணை பிறப்பிக்கப்பட்ட கூத்தாநல்லூர் தனி வட்டம் செயல்படத் தொடங்கியும், முத்துப்பேட்டை தனி வட்டமாக செயல்படாத நிலையில் உள்ளது.
தனி வட்டமாக அறிவிக்க வேண்டியதன் அவசியம்...
முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதியாகவும், அலையாத்திக் காடுகள் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் ஆய்வாளர் அலுவலகம், முத்துப்பேட்டை, எடையூர், பெருகவாழ்ந்தான் காவல் நிலையங்கள், கடலோர காவல் குழும காவல் நிலையம், சுங்கத் துறை அலுவலகம், வனச்சரகர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்அலுவலகம், 3 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், 4 தனியார் மெட்ரிக் பள்ளிகள், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம், தேர்வுநிலை பேரூராட்சிஅலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களைக் கொண்டுள்ளதால், வட்டத் தலைநகராகும் அனைத்து தகுதியும் பெற்றுள்ளது.
தற்போது இப்பகுதி மக்கள், இயற்கை பேரிடர் காலத்திலும், நலத்திட்ட உதவிகள் பெறவும், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் வட்டாட்சியரைச் சந்திக்க 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும், இப்பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் போது, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வட்டாட்சியர் நிகழ்விடத்துக்கு வர காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, முத்துப்பேட்டையை தனி வட்டமாக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவது அவசியமானதாக உள்ளது.
மேலும் பூகோள ரீதியாகவும் நீண்ட கடற்கரையை உடையதும், மீனவர்கள் நலன், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய முத்துப்பேட்டை தனி வட்டமாக அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களின் கருத்து...
பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியது: முத்துப்பேட்டை தனி வட்டமாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலை உள்ளது. இது குறித்து மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மூலமாக தமிழக வருவாய்த் துறை அமைச்சருக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என நம்பிக்கை உள்ளது என்றார்.
நாகை மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் கூறியது:
திமுக ஆட்சியின்போது, முதல்வர் கருணாநிதியால் 2011- ஆம் ஆண்டு முத்துப்பேட்டையை தனி வட்டமாக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்னால் வந்த ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல்வேறு அம்சங்கள் நிறைந்த முத்துப்பேட்டையை தனி வட்டமாக தரம் உயர்த்த வேண்டும் .அப்படி அரசு அறிவிக்காத நிலையில் திமுக சார்பில் அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.
சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கோ. பழனிச்சாமி கூறியது:
தமிழக வருவாய்த் துறை அமைச்சராக நாஞ்சில் கி. மனோகரன் இருந்தபோதே, இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, 2011-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டும் செயல்படாத நிலையில் உள்ளது.
இதனால் செங்கங்காடு, வீரன்வயல், தில்லைவிளாகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருத்துறைப்பூண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, முத்துப்பேட்டையை தனி வட்டமாக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர் நா. ராசமோகன் கூறியது:
முத்துப்பேட்டை தனி வட்டமாக அறிவிக்க தகுதியான அளவுக்கு மக்கள் தொகையையும், போதுமான நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. எனவே, இதற்கானஅறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.