சுடச்சுட

  

  இன்றளவும் மவுசு குறையாத சிமிழி காய்கறிகள்: பாரம்பரியமாக சாகுபடி செய்துவரும் விவசாயிகள்

  By DIN  |   Published on : 27th June 2018 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில், இன்றளவும் மவுசு குறையாத சிமிழி காய்கறிகளை விவசாயிகள் பாரம்பரியமாக பயிரிட்டு வருகின்றனர். இருப்பினும், உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு தங்களால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.
  திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் உள்ளது சிமிழி கிராமம். சிமிழி மற்றும் அதைச் சுற்றியுள்ள சேங்கிலாபுரம், கீழநானச்சேரி, பூங்காவூர், நெற்குப்பை, எண்கண் உள்ளிட்ட பகுதிகளில் தலைமுறை, தலைமுறையாக பாரம்பரிய முறையில் நாட்டுக் காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
  சிமிழி கிராமத்தைச் சுற்றிலும் பல கிராமங்களில் நாட்டுரக காய்கறிகள் பயிரிடப்பட்டாலும், இவற்றுக்கு மொத்தமாக சிமிழி காய்கறிகள் என்றே சுற்று வட்டாரத்தில் பெயர் விளங்கி வருகிறது. தை மாத கடைசியில் விதை விடத்தொடங்கி, இரண்டு மாதங்களில் அறுவடை ஆரம்பித்து, புரட்டாசி மாதம் வரை காய்கறிகள் அறுவடை நடைபெறுகின்றன
  இப்பகுதி காய்கறிக்கு திருவாரூர் மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பு இருக்கக் காரணம், காய்கறி உற்பத்திக்கான விதைகளை அவர்கள் சொந்தமாக விதைக்கென்றே சாகுபடி செய்கின்றனர். சிலர் கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் தரமான காய்கறி விதைகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால், மகசூலும், தரமான காய்கறிகளையும் விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.
  சிமிழி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தை மாதத்துக்குப் பிறகு ஆறு மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நிலையில், நிலத்தடி நீர் மூலம் காய்கறி சாகுபடியைத் தொடங்குகின்றனர்.
  இதுகுறித்து கீழநானச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணாநிதி கூறியது :
  ஆறு மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நேரத்தில் நிலத்தடி நீர் மூலம் நிலத்தைச் சமன்செய்து, காய்கறி தோட்டம் அமைக்கும் முறைகளைத் தொடங்கி, நேர்த்தியான நல்ல விதைகளை விதைக்கின்றோம்.  தொடர்ந்து, பராமரிப்பின் மூலம் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட நாட்டுரக காய்கறிகள் அறுவடைக்கு வருகின்றன.  ஒருநாள் விட்டு ஒருநாள் எனக் காய்கறிகளைப் பறிக்கின்றோம்.
  நாங்கள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு எப்போதும் நல்ல மவுசு உண்டு. இதனால், வியாபாரிகள் எங்களது தோட்டங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். இருப்பினும், அன்றைய சந்தை நிலவரத்தைப் பொருத்தே விலையை நிர்ணயிக்கின்றனர். எங்கள் காய்கறிக்கு நல்ல மவுசு இருந்தாலும், உற்பத்தி செய்யும் எங்களால் விலையை நிர்ணயிக்க முடியவில்லை. ஆனாலும், செலவுத் தொகையைக் கணக்கிடாமல், பாரம்பரியமாக தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக காய்கறிகளைச் சாகுபடி செய்து வருகிறோம்.  விலை எதுவானாலும் எங்கள் பகுதி காய்கறிகளுக்குக்கென்று தனி வரவேற்பு இருக்கிறது. இந்த ஆத்ம திருப்தி எங்களுக்குப் போதும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai