சுடச்சுட

  

  நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகளுக்கு ரூ. 4.93 கோடி ஒதுக்கீடு

  By DIN  |   Published on : 28th June 2018 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டுக் குழி அமைத்தல், மழைநீர் சேகரிப்பு குழிகள் மற்றும் நீர்மூழ்கி தடுப்பணை அமைக்கும் பணிகளுக்காக ரூ. 4 கோடியே 93 லட்சத்து 45 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 335 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், அதங்குடி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நிலத்தடி நீர் செறிவூட்டுக் குழி மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
   இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரெகுநாத காவிரி வடிகால் வாய்க்காலில் ரூ. 68 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு நிலத்தடி நீர் செறிவூட்டுக் குழிகளைப் பார்வையிட்டார். மேலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 15 அடி நீளம், 15 அடி அகலத்தில் தலா ரூ. 85 ஆயிரம் வீதம் மூன்று பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.
  பின்னர், ஆட்சியர் கூறியது: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நிலத்தடி நீரை உயர்த்தும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் 2017-2018 இன் கீழ், பண்ணைக் குட்டைகள் மற்றும் குளம் தூர்வாருதல் பணிகளுக்காக ரூ. 9 கோடியே 92 லட்சத்து 6 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 367 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 79 பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலத்தடி நீர் செறிவூட்டுக் குழி அமைத்தல், மழைநீர் சேகரிப்பு குழிகள் மற்றும் நீர்மூழ்கி தடுப்பணை அமைக்கும் பணிகளுக்காக ரூ .4 கோடியே 93 லட்சத்து 45 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 335 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 117 பணிகள் நடைபெற்று வருகின்றன. உறிஞ்சிக்குழி அமைக்கும் பணிகளுக்காக ரூ. 57 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 98 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 1,725 பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நடைபெறும் பகுதிகளில் விரைவாகப் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
  ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டை செல்வன்,  வட்டார வளர்ச்சி அலுவலர் ஜூலியட் ஜெசிந்தா  உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai