சுடச்சுட

  

  மறியலில் ஈடுபட முயன்ற சாலையோர மீன் வியாபாரிகள் 27 பேர் கைது

  By DIN  |   Published on : 28th June 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடியில் சாலையோரம் மீன் வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளதைக் கண்டித்து, புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் உள்ளிட்ட சாலையோர மீன் வியாபாரிகள் 27  பேரை போலீஸார் கைது செய்தனர். 
  மன்னார்குடி நகராட்சி சார்பில் தாமரைக்குளம் வடகரையில் நவீன ஒருங்கிணைந்த மீன் அங்காடி கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதையடுத்து, நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலையோரம் நிரந்தரமாகவும், விடுமுறை நாள்களில் தற்காலிகமாகவும் மீன் கடைகள் அமைத்து மீன் வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
   இதைக் கண்டித்து சாலையோர மீன் வியாபாரிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், சாலையோரம் மீன் வியாபாரம் செய்ய அனுமதி கோரி, நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, சாலையோர மீன் கடைகள் அண்மையில் மீண்டும் திறக்கப்பட்டன. 
   இந்நிலையில், சாலையோர மீன் கடைகளால், நகராட்சி மீன் அங்காடியில் பல லட்சம் ரூபாய் முன் பணம் செலுத்தி, வாடகைக்கு கடை வைத்திருக்கும் மீன் வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக, மீன் வியாபாரிகள் நலச் சங்கத்தினர்கடந்த 25-ஆம் தேதி, நகராட்சியை முற்றுகையிட்டுப் போராட்டம்  நடத்தினர்.
  இதையடுத்து, போலீஸார் உதவியுடன் சாலையோரம் இருந்த மீன் கடைகள் அகற்றப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட சாலையோர மீன் வியாபாரிகள், நகராட்சியின் இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகமும், மீன்வளத் துறையும் உத்தரவு பிறப்பிக்காத நிலையில், நகராட்சி நிர்வாகம் மட்டும் தனித்து முடிவெடுத்திருப்பது, ஒருதலைபட்சமானது என கண்டனம் தெரிவித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
  இதற்காக ஏஐடியுசி மீனவர் சங்கம் சார்பில் கீழப்பாலத்தில் மறியல் போராட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற சாலையோர மீனவர் சங்க செயலர் எம். பார்த்தீபன், பொருளாளர் தி. பூபாலன் மற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 27 பேரை போலீஸார்
  கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai