சுடச்சுட

  

  நகராட்சிகளில் வரி உயர்வைக் கைவிடக் கோரி மனு அளிக்கும் போராட்டம்

  By DIN  |   Published on : 29th June 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய நகராட்சிகளில் வரி உயர்வைக் கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  திருவாரூரில்...
  திருவாரூர் நகராட்சியில் சொத்து வரியை சதுர அடி அளவில் கணக்கிட்டு, வரியை பல மடங்கு உயர்த்திட உத்தேசித்திருப்பதை உடனடியாக கைவிட வேண்டும். கட்டடம், குடிநீர் ஆகியவற்றுக்கான வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். நகர விரிவாக்கத்துக்கு ஏற்ற வகையில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், புதை சாக்கடை, தெரு மின்விளக்கு, சாலை வசதி ஆகியவற்றை மேம்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
  இப்போராட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி கோரிக்கையை விளக்கிப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. பழனிவேல், எம். கலைமணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள், நகரக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர், நகராட்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
  மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்...
  மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின்  நகரச் செயலர் எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. முருகையன், டி. சந்திரா, ஜி. ரெகுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கட்சி நிர்வாகிகள், நகராட்சி ஆணையர் என். விஸ்வநாதனை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
  கூத்தாநல்லூரில்...
  கூத்தாநல்லூர் நகராட்சியில் வரி உயர்வு திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நா. பாலசுப்பிரமணியன், ஜி. பழனிவேல், ஒன்றியச் செயலாளர் எம். திருஞானம், நகரக் குழு நூர்முகம்மது, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முனியாண்டி உள்ளிட்டோர் நகராட்சி பொறியாளர் என். சந்திரசேகரனிடம் இந்த மனுவை வழங்கினர்.
  திருத்துறைப்பூண்டியில்...
  திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கே.ஜி. ரகுராமன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். 
  இந்த மனுக்களில் வீட்டு வரி உயர்வை ரத்து செய்வதுடன், வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரியும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
  முன்னதாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து, நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் இம்மனுக்களை வழங்கினர். 
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. சுப்பிரமணியன், எஸ். சாமிநாதன், எம்.பி.கே. பாண்டியன்,  ஒன்றியச் செயலாளர் காரல்மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai