சுடச்சுட

  

  பின்னேற்பு மானியங்களை முன்கூட்டியே வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 29th June 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பின்னேற்பு மானியங்களை முன்கூட்டியே வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 
  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது: 
  ஆற்றுப் பாசனதாரர் சங்கத் தலைவர் சா.வி. ராமகிருஷ்ணன்:  ஆகஸ்ட் 2-ஆவது வாரத்திலாவது ஒரு போக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். தூர்வாரும் பணிகளை பொதுப்பணித் துறையினர் விவசாயக் குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டும். கூட்டுறவு துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும், பொதுப்பணித் துறையில் உள்ள 75 சதவீத கரைக் காவலர் பணியிடங்கள், 40 சதவீத உதவிப் பொறியாளர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
  தமிழக விவசாயிகள் சங்க செயற்குழு உறுப்பினர் வி. பாலகுமாரன்: திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், பேரளம் பகுதி விவசாயிகளுக்கு அறிவித்த அனைத்து மானியங்களும் பின்னேற்பு மானியங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் முழுத்தொகை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படியே செலுத்தி வாங்கினாலும், அந்த மானியமும் காலம் தாழ்த்தியே வங்கிகணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அரசு சார்பில் முழுத் தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே மானியமும் அறிவிக்கப்படுவதால், பின்னேற்பு மானியம் என அறிவித்து விவசாயிகளிடம் முழுத்தொகையும் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
  கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் தம்புசாமி: குடிமராமத்து பணிகளை அலுவலர்கள் வெளிப்படையாக செய்ய வேண்டும். திட்டப் பணிகள் குறித்த விவரம், நிதிஒதுக்கீடு குறித்த பட்டியல் முன்னதாக வெளியிட வேண்டும்.
  முத்துப்பேட்டை  விவசாயி பாலகிருஷ்ணன்: தம்பிக்கோட்டையிலிருந்து தொண்டியக்காடு, கரையான்காடு வரை சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர். தற்போது, தண்ணீரின்றி தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. அதனால் நெல் சாகுபடிக்கு உதவுவதுபோல தென்னை சாகுபடிக்கும் ஆழ்துளை கிணறுகள் (பம்புசெட்) அமைத்து தர அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தமிழக இயற்கை உழவர் இயக்க மாநில பொதுச் செயலர் நெல். ஜெயராமன்: சாகுபடி முறையாக இல்லாததால் தற்போது விவசாயிகளிடம் விதைநெல் கையிருப்பில் இல்லை. கடைகளில் இருந்து வாங்க வேண்டியுள்ளது. குறுவை சாகுபடி இல்லாத நிலையில் சம்பா சாகுபடிக்காக சிஆர்1000, சிஆர்1000 சப் ஆகிய ரகங்களை மானியத்தில் வழங்க வேண்டும். இந்த ரகங்கள் குறைந்த நாள்கள் கொண்டதும், அதிக விளைச்சல் தருவதும் ஆகும். பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்தால் எம்ஜிஆர் விருது வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகளை திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பெறும் வகையில், பாரம்பரிய நெல் ரகங்களை விதைக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். ஆதிரங்கத்தில் உள்ள சட்ரஸில் ஒரு பலகை கடந்த 5 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. எனவே, பலகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  கூட்டத்தில் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பேசியது: தமிழக முதல்வர் அறிவுறுத்தியபடி குடிமராமத்து பணிகள் விவசாய சங்கங்கள் மூலம் செய்யப்படும். விவசாயிகள் நிலத்தில் பண்ணைக் குட்டைகள் வெட்டிக் கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  பண்ணைக் குட்டைகள் சிறந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பாகவும்,  சிக்கனமானதாகவும், விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமைப்பாகவும் விளங்குவதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு காவிரி டெல்டா கடைமடை விவசாயிகள் மற்றும் கடலோர பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10,000 பண்ணைக் குட்டைகள் ரூ. 100 கோடி செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
   திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் 2,200 பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் ரூ. 22 கோடியில் விவசாயிகளுக்கு அமைக்கப்பட உள்ளன.
  எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, திருவாரூர் மற்றும் மன்னார்குடி அல்லது மாவட்ட செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, திருவாரூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்ட அலுவலத்திலும், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் விவசாயிகள் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம். 
  விண்ணப்பத்தில் நிலத்தின் சர்வே எண், சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார்கார்டு நகல், புகைப்படம் மற்றும் முகவரி தொடர்பு எண் விபரங்களுடன் விரைவில் அளித்து பண்ணைக் குட்டைகளை அமைத்து பயன்பெறலாம். இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.
  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, முதுநிலை மண்டல மேலாளர் (நுகர்பொருள்) ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வேளாண்மை இணை இயக்குநர் சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai