சுடச்சுட

  

  மன்னார்குடி அரசுக் கல்லூரி தொடங்கியதன் நோக்கம் நிறைவேற்றப்படுமா?

  By சிவா. சித்தார்த்தன்.மன்னார்குடி, ஜூன் 28: திருவாரூ  |   Published on : 29th June 2018 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அரசுக் கல்லூரி தொடங்கியதன் நோக்கம் நிறைவேற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 
  ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடி பகுதி விவசாய, விவசாயத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி கற்க 40 கிலோ மீட்டர் தூரமுள்ள தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் அல்லது தஞ்சை பூண்டி, அதிராம்பட்டிணம், மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவிப்பெறும் தனியார் கல்லூரிகளில் படிக்க வேண்டி நிலை இருந்தது. ஏழை மாணவர்கள் வெகுதூர கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத சூழ்நிலையால் அவர்களின் உயர் கல்வி ஆசை நிறைவேறாமல் போனது. பெண்களின் கல்லூரி படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்தது. 
  1972-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு. கருணாநிதி தனது பிறந்த ஊரான திருவாரூரில் அரசுக் கல்லூரி அமைக்க முயன்றபோது, அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மன்னார்குடியை சேர்ந்த திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான மன்னை  ப. நாராயணசாமி, கருணாநிதியிடம் வற்புறுத்தியதன் பயனாக மன்னார்குடியிலும் ஓர் அரசுக் கல்லூரி தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
  இதையடுத்து, மன்னார்குடி, திருமக்கோட்டை வ.உ.சி. சாலையில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளுக்குள்பட்டு கையகப்படுத்தி அங்கு 1971-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மன்னை ப. நாராயணசாமி தலைமையில், கல்வி அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் முன்னிலையில், முதல்வர் மு. கருணாநிதி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலை அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தார். இதே காலக் கட்டத்தில் திருவாரூரில், திரு.வி.க. அரசுக் கல்லூரியும் தொடங்கப்பட்டது.
   கல்லூரி தொடங்கியதிலிருந்து 2000-ஆம் ஆண்டு வரை இக்கல்லூரியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களும், சொற்ப எண்ணிக்கையில் மாணவியரும் படித்து வந்தனர். உயர்கல்வி படிப்பு ஆர்வம், விழிப்புணர்வு, அரசு உதவிகள், வேலை வாய்ப்பில் முன்னுரிமை என பல்வேறு காரணங்களால் தற்போது மாணவியர் 80 சதவீதம், மாணவர் 20 சதவீதம் என்ற அளவில் படித்து  வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மகளிர் கல்லூரியாக ஆகிவிடும் சூழல் உள்ளது.
  1972-இல் தொடங்கப்பட்ட  பிரதான கட்டடத்தில் வகுப்புகள்  செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2003-ஆம் ஆண்டு, அப்போதய, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஆர். காமராஜூவின் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து நான்கு வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. 2004-ஆம் ஆண்டு, தொகுதி எம்எல்ஏ வை. சிவபுண்ணியத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பிரதான கட்டடத்தில் மேல்தளம் அமைக்கப்பட்டு அதில் 5 வகுப்பறைகள் தொடங்கப்பட்டன. பின்னர்,  நாகை மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தமிழ்த்துறைக்கு நான்கு வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. 2005-ஆம் ஆண்டு, இக்கல்லூரியின் சுயநிதிபிரிவில் முதுகலையில் தமிழ் மற்றும் வரலாறு, இளநிலை நுண்ணுயிரியல், நிர்வாக மேலாண்மை ஆகிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. இளநிலையில் 12 பாடப்பிரிவுகளும்,முதுநிலையில் 10 பாடப்பிரிவுகளும் மற்றும் ஆய்வியல் நிறைஞர்(எம்பில்) மற்றும் முனைவர்(பிஎச்டி) பட்ட ஆய்வுப் படிப்புகளுக்கு தலா ஆறு பிரிவுகளும்  உள்ளன.
  நிலை -2 (கிரேடு-2 ) என்ற தகுதியில் செயல்பட்டு வந்த இக்கல்லூரி, 2014-ஆம் ஆண்டு முதல், நிலை-1 என தரம் தமிழக அரசின் உயர்கல்வித்துறையால் உயர்த்தப்பட்டதையடுத்து, அதே ஆண்டு தேசிய தரமதிப்பீட்டில் நிலை இரண்டு என தரம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் ரூசா திட்டத்தின்கீழ் ரூ. 2 கோடி வழங்கியதையடுத்து, இதில், ஒரு கோடியில் 10 துறைகளுக்கு என குளிரூட்டப்பட்ட திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்புகள், கம்பன் கலையரங்கம் ஆகியவை கட்டடப்பட்டன. இதுபோன்ற நவீன வசதிகளுடன் கூடிய அரசுக் கல்லூரி, மாவட்டத்தில் மன்னார்குடி அரசுக் கல்லூரியில் மட்டுமே உள்ளது.
  தற்போது, இளங்கலையில் 2,600 பேரும், முதுகலையில் 300 பேரும், ஆய்வுப் படிப்புகளில் 100 பேர் என மொத்தம் 3,030 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், மாணவர்கள் 400 பேர் அடங்கும். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் தங்கும் விடுதி தனித்தனியே நான்கு உள்ளது. இதில், 250 பேர் தங்கி படிக்கின்றனர். மொத்தம் 120 பேராசிரியர் பணியிடங்களில்,நிரந்தர பேராசியர்களாக 55 பேரும், கௌரவ பேராசிரியர்களாக 52 பேரும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். உடற்கல்வி, நூலகப் பேராசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலம் நிகழாண்டு நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலகப் பணியில் 29 பணியிடங்களில் 13 பணியிடங்களில் மட்டும் இப்போது அலுவலர்கள் உள்ளனர். மற்ற பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாகவே இருந்து வருகிறது. 
  நிலை-1 என்று தரம் உயர்த்தப்பட்டும், பேராசிரியர், அலுவலர்கள் பணியிடங்கள் ஏதும் நிரப்பாமல் நிலை-2 என்ற அந்த தகுதியிலேயே இக்கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பல்கலைக் கழக வழிமுறையின்படி தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளை வாரம் தலா ஆறு மணி நேரம் பாடம் நடத்த வேண்டும். பேராசிரியர் பற்றாக்குறையால் வாரத்துக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. இதனால், வகுப்புகள் நடைபெறாததால் மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே சென்று விடுகின்றனர். மாணவியர் வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பொழுதை கழிக்கின்றனர். மேலும், 2017-2018-ஆம் கல்வியாண்டில் முதுநிலை நுண் உயிரியல், இளநிலை விலங்கியல் பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டும், கல்வி கல்லூரி இயக்குநர் அலுவலகம், இதற்கான பேராசிரியர்களை நியமிக்கவில்லை. ஆனால், இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், உரிய கல்வி, அனுபவத் தகுதியில்லாதவர்களை சொற்ப ஊதியத்துக்கு நான்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 16 வகுப்பறைகள், 5 ஆய்வக அறைகளுடன் கூடிய, புதிய கட்டடம் கட்ட ரூ.  நான்கரை கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல், மத்திய அரசின் ரூசா நிதியின்கீழ் வழங்கப்பட்ட பாக்கியுள்ள ரூ.  1 கோடியில் எட்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த இரு கட்டடங்களும் முழுமைப் பெற்று பயன்பாட்டுக்கு வர இன்னும் ஓர் ஆண்டுக்கு மேல் ஆகும். தற்போதைய, நிலையில் இளநிலை, முதுநிலை, ஆய்வுப் படிப்பு ஆகியவற்றிற்கு மொத்தம் 69 வகுப்பறைகள் தேவை. ஆனால், தற்போது இருப்பது 43 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.
  வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் கடந்த ஆண்டு முதல் ஷிப்ட்டு முறை மன்னார்குடி அரசுக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கல்லூரி வேலை நேரம் முதல் ஸ்ப்ட் காலை 9 முதல் மதியம் 1.20 மணி வரையும், 2-ஆவது ஷிப்ட்டு மதியம் 1.30 முதல் 5.40 மணி வரை என நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் காலை ஷிப்ட்டில் கலைப் பாடப் பிரிவு வகுப்புகளும், மதியம் ஷிப்ட்டில் அறிவியல் பாடப் பிரிவு வகுப்புகளும் நடைபெறும் என மாணவர்கள், பேராசியர்களுடன் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்பட்டதன்படி, கடந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரி செயல்பட்டு வந்தது.
  இந்நிலையில், நிகழ் கல்வியாண்டுக்காக ஜூன் 18-ஆம் தேதி கல்லூரி திறக்கப்பட்டது. வழக்கம்போல், கலைப் பிரிவு மாணவர்கள் கல்லூரிக்கு வந்தபோது, நிகழ் கல்வியாண்டில் அறிவியல் பாடப் பிரிவுகள் காலை ஷிப்ட்டிலும், கலைப் பாடப் பிரிவுகள் மதியம் ஷிப்ட்டிலும் செயல்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அனைத்து கலைப் பிரிவு மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, கல்வித்துறை இயக்குநரகம் அறிவுறுத்தலின்படி ஷிப்ட்டில் சுழற்சி முறை கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், இதை மாற்றி அமைக்க கல்லூரி நிர்வாகத்துக்கு அனுமதியில்லை என கூறி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்காததையடுத்து, கல்லூரி தொடங்கிய  முதல் நாளிலேயே மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து முற்றுகையில் ஈடுபட்டதையடுத்து, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
  இதுகுறித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை. அருள்ராஜன் கூறியது: இக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவில் மொத்தமுள்ள 12 துறைகளில் சேர ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் சுமார் 3,000 மாணவர்களில் 880 மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரியில் சேரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மற்றவர்களின் கல்லூரி படிப்பு கானல் நீராகிறது என்பதால், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், வகுப்பறை,பேராசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணவேண்டும், பொருளாதாரம், இதழியல், விஷூவல் கம்யூனிகேஷன் போன்ற பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என்றார்.
  இக்கல்லூரி மாணவ, மாணவியர் கூறியது: காலை நேரத்தில் நடத்தப்படும் கலைப் பிரிவு பாடத்தை படித்து விட்டு, பிற்பகலில் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் பகுதி நேரமாக பணியாற்றி வருவாய் ஈட்டி, கல்லூரி படிப்புச் செலவை பூர்த்தி செய்து வருகிறோம். திடீரென கல்லூரி நிர்வாகம் ஷிப்ட்டு முறையை மாற்றி அமைத்தால், படிப்புக்காக பகுதிநேர வேலைக்கு செல்வது பாதிக்கப்படுவதுடன்,பெற்றோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் நிலை உள்ளதால், வழக்கம்போல் காலை நேரத்தில் கலைப் பாடங்களை நடத்த வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் தொடரும் என்றனர். 
  மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா கூறியது: இக்கல்லூரியில் வகுப்பறை கட்டடங்களின் பற்றாக்குறையை அறிந்து 2014-ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கிய ரூ.15 லட்சத்தை காரணமின்றி இந்த நிதியை ஏற்றுக்கொள்ளாமல், அந்த நிதி வேறுபணிக்கு செலவிடப்பட்டது. இருப்பினும், கல்லூரியில் 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க, தலா ரூ. 2 லட்சம் நிதி அளித்துள்ளேன். தவிர, அண்மையில் கல்லூரிக்கு ரூ.25 லட்சம் தொகுதி நிதி வழங்க ஒதுக்கீடு செய்துள்ளேன் என்றார்.
  இதுகுறித்து கல்லூரி முதல்வர் சித்ரகலாராணி தெரிவித்தது: இடப்பற்றாக்குறையால் 2016-2017- இல் எடுத்த முடிவின்படி 2017-2018-ஆம் கல்வியாண்டு முதல் ஷிப்ட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மதிய ஷிப்ட்டு முறையில் அறிவியல் பாடப்பரிவுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே அப்பாடப் பிரிவு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒவ்வோர் கல்வியாண்டும் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்படும் என அஜண்டாவில்  எழுதப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டு சுழற்சி முறை பின்பற்றப்பட்டுள்ளது. ஜூலை 2-ஆம் தேதி கல்லூரி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது மாணவர்களுடன் பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மத்திய மற்றும் மாநில அரசு நிதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகள் நிறைவடைந்ததும் ஷிப்ட்டு முறை நீக்கப்பட்டு அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் முழுநேர கல்லூரியாக செயல்படும் என்றார். 
  ஏழை,எளியவர்களின் பிள்ளைகள் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட இக்கல்லூரியின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு, கல்லூரி தொடங்கியதன் நோக்கம் சிதறாமல் மாணவர்கள் உயர்கல்வி அறிவு பெற வேண்டும் என்ற அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai