சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக, 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
  நீடாமங்கலம் அருகேயுள்ளது அனுமந்தபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் மகன்  குணசேகரன் (30). விவசாயி. இவர் நெல் அறுவடைக்காக  கதிரடிக்கும் இயந்திரத்தை நீடாமங்கலம் பகுதியிலிருந்து வாடகைக்கு எடுத்துச் சென்று வெள்ளிக்கிழமை காலை அனுமந்தபுரம் மேலத்தெரு இறக்கத்தில் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, கொரடாச்சேரியிலிருந்து  மாவட்ட திமுக செயலர் பூண்டி கே. கலைவாணனுக்குச் சொந்தமான கார் அவ்வழியாக வந்தது. காரிலிருந்தவர்கள் கதிரடிக்கும் இயந்திரத்தை சீக்கிரமாக கீழே இறக்கக்கூடாதா? எனக் கேட்டனராம். இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, காரில் வந்த மகேஷ், ரகுராமன், சரவணன் ஆகிய மூவரும் குணசேகரன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் ஆகிய இருவரையும் தாக்கினார்களாம். இதில் குணசேகரன் படுகாயமடைந்தார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மூவரையும் தாக்கியதுடன், காரையும் சேதப்படுத்தினராம். தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த குணசேகரனை மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கிராமத்தினர் பிடித்து வைத்திருந்த 3 பேரையும், சேதமடைந்த காரையும் போலீஸார் மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
  மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் கார் சேதப்படுத்தப்பட்டதையும்,  அவரது காரில் வந்த 3 பேர் தாக்கப்பட்டதையும் அறிந்த ஆதரவாளர்கள் நீடாமங்கலம் காவல் நிலையம் முன்பாக குவிந்தனர். இதையடுத்து, மன்னார்குடி, வடுவூர் போலீஸார், நீடாமங்கலம் காவல் நிலையத்துக்கு பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக வரவழைக்கப்பட்டனர்.
  மன்னார்குடி  டிஎஸ்பி அசோகன், நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் பழனிசாமி  மற்றும் காவல்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் இருதரப்பினரிடையே விசாரணை நடத்தினர்.
  இதுதொடர்பாக குணசேகரன் அளித்த புகாரின்பேரில், மகேஷ் (33), ரகுராமன் (28), சரவணன் (27) ஆகிய மூவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை தஞ்சாவூர் வன்கொடுமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றனர். இதேபோல், மகேஷ் அளித்த புகாரின்பேரில் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், வினோத் உள்ளிட்ட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  கைது செய்யப்பட்ட 3 பேரையும் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும், வெளியூரில் காவல்துறையில் பணியாற்றும் பெண் ஒருவரும் கடுமையாக தாக்கியதாக தெரியவந்ததன் பேரில் காவல்துறை அதிகாரிகள் அந்த பெண் போலீஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai