சுடச்சுட

    

    காவிரி டெல்டா பகுதியில் நிகழும் மணல் கொள்ளையைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
    மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி வழக்கமாக திறக்கப்பட்டு குறுவை, சம்பா, தாளடி சிறந்த முறையில் நடைபெற்ற வந்தது. கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர் கிடைக்காததால் டெல்டா பாசனத்துக்கு உரிய நேரத்தில் நீர் கிடைக்காமல் போனதால், காவிரி டெல்டா பகுதியில் ஆறுகள் வறண்டு போனது. பெரும்பாலான விவசாயிகள் பம்பு செட் மூலம் சாகுபடி செய்யும் நிலை உள்ளது. இதற்கும், உரிய மும்முனை மின்சாரம் சரிவர கிடைப்பதில்லை.  
    இந்நிலையில், காவிரி டெல்டா பகுதியில் வறண்டு போன ஆறுகள் மணல் கொள்ளையர்களுக்கு சொர்க்க பூமியானது. இதற்கு முதலீடு சொந்த டிராக்டர்கள், லாரிகள், மினி லாரிகள், டயர்வண்டிகள் இருந்தால் போதும். மணல் கொள்ளைக்கு காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை அலுவலர்களின் ஆதரவு இருந்து வருகிறது என்று கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. 
    சம்பந்தப்பட்ட பகுதி அரசியல் கட்சியினரின் ஆதரவு என மணல் கொள்ளை தீவிரமடைந்து வருகிறது. மணல் கடத்தலில் அதிகளவில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 
    பல இடங்களில் ஆறுகளில் மணலை அள்ளி குவாரிபோல் சேமித்து வைத்து விற்பனை செய்யும் நிலையும் உள்ளது. ஆறுகளில் அள்ளப்படும் மணல் அந்தந்த பகுதியில் விற்பனை என்ற நிலைமாறி வெளி மாநிலங்களில் விற்பனை என்பது அதிகரித்தது. குறிப்பாக, கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு மணலை லாரிகளில் அள்ளிச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. 
    மேலும், சாக்கு மூட்டைகளில் மணலை அள்ளி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று மறைவான இடங்களில் சேமித்து வைத்து சிறு வியாபாரிகளாக மணல் விற்பனை செய்யும் இளைஞர்களும் அதிகரித்துள்ளனர். அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது பெயரளவுக்கே அரசு அலுவலர்களின் நடவடிக்கை உள்ளது. இதனால் டெல்டாவில் மணல் கொள்ளை என்பது பாகுபடற்ற அனைத்து அரசியல் கட்சியினரின் சமரச தொழிலாகவும் அங்கீகாரம் பெற்றுவிட்டது.
    மணல் அள்ளும் தொழிலில் அதிகளவில் கிராமப்புற இளைஞர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். சம்பிரதாயத்துக்கு நடைபெறும் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையின் நடவடிக்கையால் இளைஞர்கள் சிலர் மணல் கடத்தல் வழக்கில் கைதாகின்றனர். இது, சம்பந்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால், சமூக அக்கறையுடன் சம்பந்தப்பட்ட துறையினர் காவிரி டெல்டாவில் நிகழும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai