Enable Javscript for better performance
மினி பஸ்கள் மோதல்: ஒருவர் சாவு: 60 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை இரண்டு மினி பஸ்கள் உரசிக் கொண்டு, சாலையோரம் இருந்த குளத்தில் ஒரு மினி பஸ் கவிழ்ந்ததில்  முதியவர் உயிரிழந்தார்.
    மேலும் அந்த பஸ்சில் இருந்த 60 பேர் காயமடைந்தனர். 
    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், எக்கல் கிராமத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும், வெள்ளங்கால் கிராமத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக இரு மினி பஸ்கள் வந்தன.
    இரு பஸ்களும் நெடும்பலம் மாரியம்மன் கோயில் குளம் அருகே வந்தபோது, உரசிக்கொண்டன. இதனால்,  எக்கலில் இருந்து வந்த மினி பஸ், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குளத்தில் கவிழ்ந்தது. 
    தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், குன்னலூரைச் சேர்ந்த வேலாயுதம் (69) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 
    காயமடைந்த 60 பேரில் 36 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், 24 பேர் திருவாரூர்அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 
    இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மன்னார்குடி கோட்டாட்சியர் செல்வசுரபி, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் கே. மகேஷ்குமார், காவல் ஆய்வாளர் அனந்த பத்மனாபன் ஆகியோர் நேரில் சந்தித்து, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க  ஏற்பாடு செய்தனர்.
    மேலும், இந்த விபத்து தொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து மினி பஸ்களின் ஓட்டுநர்கள் எக்கல் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், வெள்ளங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai