Enable Javscript for better performance
சட்டவிரோத குடிநீர் இணைப்புத் துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    சட்டவிரோத குடிநீர் இணைப்புத் துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 18th May 2018 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே குடியிருப்புப் பகுதிகளில் பொருத்தப்பட்ட சட்டவிரோத குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் வியாழக்கிழமை துண்டித்தனர். இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின்கீழ், குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரதான குழாயிலிருந்து முறைகேடாகக் குடியிருப்புப் பகுதிக்கு குடிநீர் இணைப்புப் பொருத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. 
    இதன் காரணமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நம்பியுள்ள ஆதிரெங்கம், கட்டிமேடு, மேலமருதூர், பிச்சன்கோட்டகம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டது.
    இந்த நிலையில், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் கே. மகேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது, முறைகேடாக வீடுகளுக்குப் பொருத்தப்பட்ட குடிநீர் இணைப்பைத் துண்டித்ததுடன், அதற்குக் காரணமானவர்களைக் கடுமையாக எச்சரித்தனர்.
    இதேபோல், கட்டிமேடு அருகே பிரதான குழாயில் முறைகேடாகப் பொருத்தப்பட்ட குடிநீர் இணைப்பைத் துண்டிக்க முற்பட்ட போது, அப்பகுதி மக்கள் குறுக்கிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
    மேலும், வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைவில் மாற்று ஏற்பாடு செய்துத் தருவதாக அளித்த வாக்குறுதியை ஏற்று, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai