ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இரண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு, ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், விவசாயமும் பாழ்படும் என இத்திட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்தும், இத்திட்டத்தை அனுமதித்த மத்திய அரசைக் கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் உள்ளிட்ட 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
திருவாரூரில் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை வகித்துப்  பேசியது:
மீத்தேன், ஷேல் எரிவாயுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு எழுந்ததால், அனைத்து எரிபொருள்களையும், பூமியிலிருந்து எடுப்பதற்கான ஒற்றை உரிமத்தைப் புதுப்பித்தல் எனும் முறையில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 55 இடங்களிலும், தமிழகத்தில் 3 இடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
இதன் மூலம், காவிரி டெல்டாவில் உள்ள விளைநிலங்கள் அழிவதுடன், குடிநீர் மாசடையும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக் குழு உறுப்பினர்கள் பி.எஸ். நாகராஜன், சி.பி. முருகானந்தம், எஸ்.வீராச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மன்னார்குடியில்...
மன்னார்குடி மேலராஜவீதியில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தலைமை அஞ்சலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமை வகித்தார்.
இதேபோல், கோட்டூர் அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வை. சிவபுண்ணியம் தலைமை வகித்தார். இந்த இரு இடங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எம். சுதர்ஸன் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு உறுப்பினர் எஸ். ஜமால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்  செயலாளர் ஜெகபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை அஞ்சலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் தலைமை வகித்தார். கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் வையாபுரி, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றியச் செயலாளர் பாஸ்கர், நகரச் செயலாளர் முருகேசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தமயந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
நீடாமங்கலத்தில்... 
நீடாமங்கலம் தலைமை அஞ்சல் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஞானமோகன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, நகரின் பிரதான வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து, அஞ்சல் நிலையத்தை ஆர்ப்பாட்டக்குழுவினர் அடைந்தனர்.
வலங்கைமானில்...
வலங்கைமான் தலைமை அஞ்சல் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் ரெங்கராஜன், ஒன்றியச் செயலாளர் தங்கமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com