சுடச்சுட

  

  நெல்லுக்கான ஊக்கத் தொகையை  உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 01st September 2018 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் நெல் விலை நிர்ணயம் குறைவாக இருப்பதால், அதை ஈடுசெய்யும் வகையில், தமிழக அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்  எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட  அறிக்கை: 
   வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் விலை நிர்ணயம் செய்கிறது. மத்திய வேளாண் பொருள்கள் உற்பத்தி செலவு- விலை நிர்ணயக் குழு கூடி குறைந்தபட்ச விலையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். 
  இந்த பரிந்துரையை  மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கூடி  இறுதிசெய்து அறிவிக்கும்.
  பொதுவாக இந்த பரிந்துரை விலை குறைவாகத்தான் இருக்கும். அமைச்சர்களின் குழு, அதையும் குறைத்தே அறிவிக்கும். இது  ஆண்டுதோறும்  நிகழக்கூடியது.  ஒவ்வோர் ஆண்டும் உற்பத்திக்கான செலவு கூடிவருகிறது. இதில் சரிபாதி அளவுக்கே விலை கூடுதலாக்கப்படும். 
  இந்நிலையில்தான், உற்பத்தி செலவோடு 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்று பேராசிரியர் எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரை செய்ததை,  நடப்பு பருவ நெல்லுக்கு கூடுதலாக ரூ.200 சேர்த்து விலையை  மத்திய  அரசு  அறிவித்துள்ளது. 
  இதன்மூலம் ரூ.1,750  விலை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், குவிண்டால் ரூ.2,750 நிர்ணயம் செய்வதுதான் பரிந்துரையின்படி அமையும் விலையாகும்.  
  மேலும் மத்திய அரசு அறிவிக்கும் விலைக்கும் மேலாக எந்த வடிவத்திலும் மாநில அரசுகள் கூடுதல் தொகை கொடுக்கக்கூடாது என முன்பே வரையறுத்து, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவேதான் இதுவரை வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை கூட மாநில அரசே தன் சொந்த நிதியில் கொடுத்து வருகிறது. 
  நடப்பு பருவம் முதல் மாநில அரசு வழங்கி வரும் ஊக்கத் தொகையை நிறுத்தும்  வகையில் மத்திய  அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது.  இது சரியானதல்ல.    மேலும் விவசாயிகள்  மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, மகசூலையும் பாதிக்கும்.
  1979 - 80 இல் தொடங்கி  வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை  அல்லது இடை நிகழ் செலவை தொடர்ந்து வழங்க வேண்டும். நடப்பு காரீப் பருவத்துக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகம் ரூ.500,  மோட்டா ரகம் ரூ.300 என உயர்த்தி வழங்க  வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai