மத்திய அரசின் கொள்கையால் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்று விட்டது

மத்திய அரசின் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்று விட்டது என்றார்

மத்திய அரசின் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்று விட்டது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் பொதுத் துறை வங்கிகள் திவாலாகும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்துள்ள மக்களின் பணத்துக்கு உத்தரவாதம் இல்லை. நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்ற பெரும் முதலாளிகள், அதானி, அம்பானி ஆகியோர் நடத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பணத்தை வாரி இறைப்பதோடு, அவர்களுக்கான ரூ. 4 லட்சம் கோடி கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதோடு நாட்டில் தொழில், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம்ராஜன், கார்ப்பரேட்  கம்பெனிகளும், பெரும் முதலாளிகளும் கொடுக்க வேண்டிய வாராக்கடன் குறித்து 18 பக்க அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தார். அதன்பேரில் வாராக்கடன்கள் இதுவரை வசூலிக்கப்படவில்லை. 
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை பலமுறை நிரம்பியும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலைமை மிகவும் கேள்விக் குறியாக உள்ளது. காவிரி நீரை நம்பி நாற்று விட்டவர்கள், கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வராததால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதுடன், அரசிடம் இழப்பீடு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசு, டெல்டா மாவட்ட விவசாயிகளின் உண்மை நிலையை அறிந்து அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், நிர்வாக குளறுபடிகளைக் களைந்து உடனடியாக கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்து, குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்ய உதவி செய்ய வேண்டும். 
முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால், மத்திய அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், முடிவு என்னவென்று தெரியவில்லை. இதுதொடர்பான உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பதவியிலிருந்து விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். 
மத்திய அரசு நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிக் கல்வியை ஒழிப்பதற்கான பணியில் இறங்கியுள்ளதால், தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளை மூடும் சூழல் உருவாகியுள்ளது. இதன்மூலம் தொடக்கக் கல்வி, உயர்கல்வி போன்றவற்றை தனியார்மயமாக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதை மாநில அரசும் ஏற்றுக்கொண்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பதாகக் கூறி இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ் பங்கேற்று, தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளை மூடவிருப்பதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளதே இதற்கு உதாரணமாகும். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவும், நிறைவேறாத கனவாகவும் மாறிவிடும் என்றார். பேட்டியின்போது, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com