அண்ணா பிறந்த நாள்: சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் 110 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் 110 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் 110- ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவாரூர், அண்ணா சதுக்கம் பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக, தேமுதிக, அமமுக, அதிக (திவாகரன் கட்சி) உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் நகரச் செயலாளர் ஆர்.டி. மூர்த்தி தலைமையில், கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அதிமுகவினர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். இதில் ஒன்றியச் செயலாளர் பி.கே.யு. மணிகண்டன், அம்மா பேரவை நகரச் செயலாளர் எஸ். கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மன்னார்குடியில்...
மன்னார்குடியில், அதிமுக சார்பில் மேலராஜவீதி பெரியார் சிலை முன்பிருந்து, கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் கா.தமிழ்ச்செல்வம் தலைமையில் ஊர்வலமாகச் சென்று, ருக்மணிபாளையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் தங்க.தமிழ்கண்ணன், ஜெ.பேரவை மாவட்டச் செயலாளர் பொன்.வாசுகிராம், கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திமுக சார்பில், காந்தி சாலையில் உள்ள, கட்சி அலுவலகத்திலிருந்து, நகரச் செயலாளர் வீரா.கணேசன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.பாலு, மாவட்ட துணைச் செயலாளர் கலைவாணி மோகன், அவைத் தலைவர் த.முருகையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், அமமுக சார்பில் அன்னவாசல் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து, மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில், இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், கட்சியின் வழக்குரைஞர் அணி மாநிலச் செயலாளர் கு.சீனிவாசன், மாநில அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் க.மலர்வேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அண்ணா திராவிடர் கழகம் சார்பில் மூன்றாம் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து இருசக்கர வாகனங்களில் ஊர்வலகமாகச் சென்று, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வி.திவாகரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் கே.இளந்தமிழன்,டி.என்.பாஸ்கர், கு.பா.அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூரில் திமுக நகர செயலாளர் எஸ்.எம். காதர் உசேன் தலைமையில், நகர அவைத்தலைவர் எஸ்.வி. பக்கிரிசாமி, மாவட்டப் பிரதிநிதி ஜெ. குமரேசன் உள்ளிட்ட ஏராளமானோர், கட்சி அலுவலகத்திலிருந்து இருச்சக்கர வாகனத்தில் ஊர்வலமாகப் புறப்பட்டு, பண்டுதக்குடியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக நகர செயலாளர் டி.எம். பஷீர் அஹமது தலைமையில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் எல்.எம். முஹம்மது அஷ்ரப் முன்னிலையில், நகர துணைச் செயலாளர் எம். உதயகுமார், பொருளாளர் ஆர். பாஸ்கரன் உள்ளிட்ட பலர், அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேறக் கழகம் சார்பில், நகர செயலாளர் சின்ன அமீன் தலைமையில், நிர்வாகி விக்ரம் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினர்.
நீடாமங்கலத்தில்...
அதிமுக சார்பில் நீடாமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கோ.அரிகிருஷ்ணன் தலைமையிலும், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆதி.ஜனகர், நகரச் செயலாளர் இ.ஷாஜஹான், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையிலும் பெரியார் சிலை முன்பிருந்து ஊர்வலமாகச் சென்று, தஞ்சை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், திமுக சார்பில் கட்சியின் திருவாரூர் மாவட்ட அவைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான சித்தமல்லி ந.சோமசுந்தரம் தலைமையிலும் முன்னாள் எம்எல்ஏ பி.ராஜமாணிக்கம், வடக்கு ஒன்றியச் செயலாளர் விசு.அண்ணாதுரை, மாநில மாணவரணி முன்னாள் இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோம.செந்தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளர் ஆர்.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையிலும் ஊர்வலமாகச் சென்று, அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
வலங்கைமானில்...
வலங்கைமானில் அதிமுக சார்பில் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் சங்கர் தலைமையிலும் நகரச் செயலாளர் சா.குணசேகரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் மாஸ்டர் எஸ்.ஜெயபால் ஆகியோர் முன்னிலையிலும் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபால், திமுக சார்பில் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் வீ.அன்பரசன் தலைமையிலும், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தெட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் சிவநேசன் ஆகியோர் முன்னிலையிலும், பள்ளிவாசல் பகுதியிலிருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமமுக சார்பில் வலங்கைமான் மேற்கு ஒன்றியச் செயலாளர் வின்சென்ட் தலைமையிலும், நகரச் செயலாளர் வீரபாண்டியன் முன்னிலையிலும் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
குடவாசலில்...
குடவாசலில், திருக்குளம் எதிரே அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் குடவாசல் திமுக நகரச் செயலாளர் முருகேசன், ஒன்றியச் செயலாளர் பிரபாகரன், பொருளாளர் ஆதித்யா பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com