முத்துப்பேட்டை தனி வட்டமாக தரம் உயர்த்தப்படும்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
By DIN | Published On : 01st April 2019 08:00 AM | Last Updated : 01st April 2019 08:00 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தை 2-ஆக பிரித்து முத்துப்பேட்டையை தனி வட்டமாக உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது அவர் மேலும் பேசியது: தமிழகத்தில் 76 கல்லூரிகள் தொடங்கப்பட்டு கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். முதல்வர் காப்பீட்டுத் திட்ட பயன்பாட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் ஆறரை கோடியில் பணிகள் நடைபெற்றுள்ளன . ரூ. 3.23 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருத்துறைப்பூண்டி , முத்துப்பேட்டையில் ரூ. 96 கோடியில் சாலை பணிகள் நடைபெற்றுள்ளன. முத்துப்பேட்டையை தனி வட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
டிடிவி. தினகரன் கட்சியை பதிவு செய்யாமலேயே அமைப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் கட்சியை உடைப்பாராம் இந்த ஆட்சியை அகற்ற முயற்சிக்கும் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார் முதல்வர்.