திமுகவின் வெற்றித் தொடருமா திருவாரூரில்?

பசுவின் கன்றை கொன்ற தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியை நிலைநிறுத்திய மனுநீதிச் சோழனின்

பசுவின் கன்றை கொன்ற தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியை நிலைநிறுத்திய மனுநீதிச் சோழனின் தலைநகராக விளங்கிய பெருமைக்குரிய ஊர் திருவாரூர்.  முசுகுந்த சக்கரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்டு அருள்தரும் திருத்தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் அமைந்த தலம், ஆசியாவின் பெரிய தேரான ஆழித்தேர் வலம் வரும் ஊர், சங்கீத மும்மூர்த்திகள் அவதரித்தத் தலம் என எண்ணற்றச் சிறப்புகளுக்குரியது திருவாரூர். 
திருவாரூர் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த  முன்னாள் முதல்வர் மு.  கருணாநிதி, கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7- ஆம் தேதி மறைந்ததன் காரணமாக,  இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையொட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் திருவாரூர் தொகுதிக்கு 2019 -ஆம் ஆண்டு ஜனவரி 28- ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.   
கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து,  மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.  தற்போது, மக்களவைத் தேர்தலுடன், திருவாரூர் தொகுதியும் இடைத் தேர்தலை சந்திக்கிறது. 
இந்தத் தொகுதியில் திருவாரூர், குடவாசல் (பகுதி), நீடாமங்கலம் (பகுதி), கூத்தாநல்லூர் ஆகிய வட்டங்களும், கொரடாச்சேரி பேரூராட்சியும் அடங்கியுள்ளன.  வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்ட இத்தொகுதியில் 
வெள்ளாளர் சமூகத்தினர், முக்குலத்தோர், தலித்துகள் பெரும்பான்மை சமூகத்தினர்.  செட்டியார்,  முதலியார்,  நாடார் உள்பட பல்வேறு சமூகத்தினரும் இங்கு பரவலாக  உள்ளனர். ஹைட்ரோ கார்பன் பிரச்னை, காவிரி நதி நீர் பிரச்னை போன்ற பிரச்னைகள்  மக்களவைத் தேர்தலில் மட்டுமல்லாமல் இத்தொகுதி இடைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.
மக்களின் நீண்ட கால கோரிக்கையான திருவாரூர் புதிய பேருந்து நிலையம் கோரிக்கை அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது, தற்போது மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும்,  இப்பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் நீடித்த  நீண்ட காலதாமதம் மக்களிடம் பெரும் அதிருப்தியையே ஏற்படுத்தியிருந்தது என்பதையும் மறுக்க முடியாது. 
திருவாரூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க  அரைவட்டச் சுற்றுச்சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்பாட்டுக்கு வர வேண்டும், கிராமப்புறங்களுக்குச் செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும்,  வாய்க்கால்களை தூர்வார வேண்டும், திருவாரூரில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும், சீனிவாசபுரம் மடப்புரம் பகுதிகளில் உள்ள சிறிய பாலங்களை அகற்றிவிட்டு, பெரிய பாலங்கள் அமைக்க வேண்டும்,   நவீன தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும், திருவாரூரிலிருந்து பகல் நேரங்களில் சென்னைக்கும்,  திருச்சிக்கு காலை 8 மணிக்கு முன்பாகவும், மாலை 5 மணிக்கு பிறகும் ரயில் இயக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் இத்தொகுதியில் உள்ளன.
இத்தொகுதியில் 1962-ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் திமுக 7 முறை வென்று முன்னணி வகிக்கிறது. இதற்கடுத்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வென்றுள்ளன.  ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதன் காரணமாக, 1991-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் வீசிய அனுதாப அலைக்கு எதிராக,  தமிழகத்தில் திமுக கூட்டணி வென்ற 7 தொகுதிகளில் திருவாரூர் தொகுதியும் ஒன்று. 
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில்   தவிர்க்க முடியாத ஆளுமையான மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி வளர்ந்த ஊர் இவ்வூர். அவர் பிறந்த ஊரான திருக்குவளை தற்போது நாகை மாவட்டத்தில் உள்ளதெனிலும், தன்னை திருவாரூர்க்காரராக அடையாளம் காட்டவே கருணாநிதி விரும்பினார்.  தான் வளர்ந்த திருவாரூர் மீது பெரும் பாசம் கொண்டவர் கருணாநிதி. இருப்பினும், அவர்  இத்தொகுதியில் போட்டியிட நீண்ட காலம் வாய்ப்பில்லாமலேயே இருந்தது. காரணம், திருவாரூர் தொகுதி பல ஆண்டுகளாக தனித் தொகுதியாகவே இருந்தது.  நான் போட்டியிடக் கூடாது என்பதற்காகவே திருவாரூரை தனித் தொகுதியாகவே வைத்துள்ளனர்' என சில நேரங்களில்  தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே தெரிவித்தவர் கருணாநிதி.
அவரது ஆதங்கம், 2011-ஆம் ஆண்டில் நீங்கியது. அதுவரை தனித் தொகுதியாக இருந்த திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி 2011-ஆம் ஆண்டில் பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டது. தனது நீண்ட கால ஆசைப்படி, 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் கருணாநிதி திருவாரூரில் களம் கண்டார். சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இரண்டாம் முறையாக 2016-ஆம் ஆண்டிலும் திருவாரூரில் கருணாநிதியே களம் கண்டார். 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று,  அந்தத் தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.  தற்போது இத்தொகுதியின் இடைத் தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரான பூண்டி கே. கலைவாணன், அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், அமமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக இயற்கை விவசாயி அருண் கே. சிதம்பரம் உள்பட 15 பேர் களத்தில் உள்ளனர்.  
திமுகவுக்கு முக்கியம்...
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு,   தமிழகத்திலேயே  அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இத்தொகுதியில்,  கட்சியின் பிரபலங்களில் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்படும் எனக் கருதப்பட்டது. அந்த வகையில்,  திமுக தலைவர் ஸ்டாலின் அல்லது உதயநிதி ஸ்டாலின் அல்லது  முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  
வேட்பாளர் தேர்வு,  கூட்டணி கட்சியினரை ஆலோசிக்காமல் திமுக தனித்து பிரசாரம் மேற்கொண்டது என சிறிய உரசல்கள் திமுக கூட்டணிக் கட்சியினரிடம் நிலவினாலும்,  அந்தக் கருத்து வேறுபாடுகள் கூட்டணிக் கட்சியினரின் களப்பணியில் பெரிய அளவில் எதிரொலிக்கவில்லை.  திருவாரூரைப் பொருத்தவரை, மக்களவைத் தொகுதி தேர்தல் பணிகளை விட, சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளே மிகைப்பட்டுள்ளன.  கருணாநிதி மீது திருவாரூர் மக்கள் கொண்ட பாசம்,   திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கும்  செல்வாக்கு ஆகியன திமுக மிகப் பெரும் பலமாகக் கருதப்படுகிறது.  இவைத் தவிர,  ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற பிரச்னைகளால் மத்திய அரசுக்கு எதிராக நிலவும் மக்களின் மனநிலை, மாநில அரசு மீதான அதிருப்தி,  பரவலாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் வாக்கு வங்கி,  சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவின் வாக்கு விகிதத்தை அதிகரிக்கும் என நம்புகிறது திமுக. 
திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் செயல்பட்ட காலத்தில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக 3-ஆம் இடத்தையே பெற முடிந்தது. இது, ஸ்டாலினின் தலைமை மீது விமர்சனங்களை எழுப்பியது. அந்த விமர்சனங்களுக்கு,  சட்டப் பேரவை தொகுதிகளின் இடைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உள்ளது. இதில், தனது தந்தையும், கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சொந்தத் தொகுதியான திருவாரூர் தொகுதியின் வெற்றி, மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதற்கேற்பவே திமுக அனல் பறக்கும் பிரசாரத்தை கையாண்டு வருகிறது. அதே போல, கூட்டணிக் கட்சித் தலைவர்களும் திருவாரூர் தொகுதிக்கு உயர் முக்கியத்துவம் அளித்து
வருகின்றனர். 
 அதிமுக...
திருவாரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக களம் காணும் முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், நாகையைச் சேர்ந்தவராக இருந்தாலும்,  ஏற்கெனவே வேளாண் துறை அமைச்சராக இருந்தவர் என்ற வகையில் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். இத்தொகுதியில் வெள்ளாளர் சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதும்,  திருவாரூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றியதும் இவருக்கு பலமாகக் கருதப்படுகிறது.  உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜின் உத்வேகத்துடன் கூடிய தேர்தல் பணிகள், கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஆகியன அதிமுகவுக்கு பலமாகக் கருதப்படுகிறது.
 அமமுக...
அமமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டச்  செயலாளர் எஸ். காமராஜ் போட்டியிடுகிறார்.  ஏற்கெனவே, அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தவர் என்ற வகையில், மக்களிடையே சற்று பரிச்சயம் மிக்கவர் என்பதால், இவருக்கும் இத்தொகுதியில் உரிய வரவேற்பு உள்ளது. எனினும், கட்சியின்  சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் அதிக முனைப்புக் காட்ட வேண்டியுள்ளது.  அதிமுகவின் அதிருப்தி வாக்குகளையும், சிறுபான்மையினரின் வாக்குகளையும்  பிரிப்பதில் இவர் முக்கிய பங்காற்றுவார் எனக் கருதப்படுகிறது. 
மநீம...
மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக   இயற்கை விவசாயி கே. அருண் சிதம்பரம் களம் காண்கிறார்.  திருவாரூர் இடைத் தேர்தலை குறிவைத்தே மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை கமல்ஹாசன் திருவாரூரில் நடத்தினார் எனக் கூறப்படுகிறது. இவர், இளம் வாக்காளர்களின் வாக்குகளைப் பெறுவதில் முக்கிய பங்காற்றுவார் எனப்படுகிறது.  இங்கு பெறக்கூடிய வாக்குகள் மக்கள் நீதி மய்யத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடும்.
திருவாரூர் தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில்  நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி, சுயேச்சைகள் என  மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு கட்சியும் மக்களவைத் தேர்தலுக்கு செலுத்தும் கவனத்தை விட, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்தத் தொகுதியில் வாக்குகளைப் பெறுவதில் உயர் கவனம் செலுத்தி வருகின்றன. 
கருணாநிதியின் சொந்தத் தொகுதியின் வெற்றி தனது அரசியல் பயணத்துக்கு மிக, மிக அவசியம் என்ற வகையில் ஸ்டாலினும், கருணாநிதி என்ற ஆளுமை இல்லாத நிலையிலாவது இத்தொகுதியைக் கைப்பற்றி விட வேண்டும், இத்தொகுதியைக் கைப்பற்றிவிட்டாலே திமுகவினரின் எதிர்காலத்தை சவாலுக்குரியதாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதிமுகவும் இத்தொகுதியில் பல்வேறு வியூகங்களைக் கையாண்டு வருகின்றன.  ஆழித்தேர் வலம் வந்து சென்றுள்ள நிலையில், ஆருரில் அடுத்த வலம் வரவுள்ள தேர் யாருடையது என்பது மாநில அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- சி. ராஜசேகரன். 

வாக்காளர்கள் விவரம்
 ஆண்கள்     1,30,716
பெண்கள்     1,35,421
இதரர்     7
மொத்தம்     2,66,159

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்
2016    மு.கருணாநிதி    திமுக     
2011    மு.கருணாநிதி    திமுக         
2006    உ. மதிவாணன்    திமுக        
2001    ஏ.அசோகன்     திமுக        
1996    ஏ.அசோகன்    திமுக        
1991     வி.தம்புசாமி     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்        
1989     வி.தம்புசாமி    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்        
1984     எம்.செல்லமுத்து    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்      
1980    எம்.செல்லமுத்து     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்       
1977    தாழை மு.கருணாநிதி     திமுக 
1971    தாழை மு. கருணாநிதி    திமுக
1967    தனுஷ்கோடி    மார்க்சிஸ்ட் 
1962    சி.எம். அம்பிகாபதி    காங்கிரஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com