சுடச்சுட

  


  திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீசர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தீர்த்தவிடங்க தியாகராஜர் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  வில்வாரண்யம் என அழைக்கப்படும் இத்தலம் மேற்கு நோக்கிய சிவன் கோயிலாகவும், அசுபதி நட்சத்திர பரிகாரத் தலமாகவும் மற்றும் திருமணத்தடை, மகப்பேறின்மை,  நாகதோஷம் போன்றவற்றை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.
  இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 2- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, விக்னேஸ்வர உத்ஸவம், முருகப் பெருமான் உத்ஸவம் நடைபெற்றது. ஏப்ரல் 7- ஆம் தேதி அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் வீதியுலாவும், 8- ஆம் தேதி புஷ்ப விமானத்தில் சுவாமி வீதியுலாவும், அன்றிரவு தியாகராஜ சுவாமி சன்னிதியில் சந்திரசேகரருக்கு அதிகாரப் பட்டம் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
  தொடர்ந்து, ஏப்ரல் 9- ஆம் தேதி புஷ்பப் பல்லக்கிலும், 10- ஆம் தேதி வசந்த மண்டபத்தில் பாரம்பரிய பஞ்சமுக வாத்தியம் இசைக்கப்பட்டு, தீர்த்தவிடங்க தியாகராஜ சுவாமிக்கு வசந்த உத்ஸவமும், 11-இல் இந்திர விமானத்திலும், 13-இல் யானை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
  பின்னர், ஏப்ரல் 14- ஆம் தேதி வெண்ணெய்த்தாழி உத்ஸவமும், அன்றிரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 15-இல் கைலாச வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.
   தேரோட்டம்...
  தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (ஏப். 16) தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி,திருக்குளக்கரையில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், தீர்த்தவிடங்க தியாகராஜர் எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெற்றது. 
  செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை நிர்வாகி வி. திவாகரன், தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் குமரசாமி, ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்கரசி உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டபடி தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிளும் வலம் வந்து, இரவில் தேர் நிலையை அடைந்தது.
  இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் உதவி ஆணையர் ச. கிருஷ்ணன், செயல்அலுவலர் எம். முருகையன், லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் வி. ஆறுமுகம், செயலர் எஸ். சீனிவாசன், கோயில் மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
   லாரி உரிமையாளர்கள் சங்கம்  சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.  காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன். கார்த்திக், காவல் ஆய்வாளர் அன்பழகன், போக்குவரத்து காவல் பிரிவு உதவி ஆய்வாளர் எஸ். ஆறுமுகம் ஆகியோர் தலைமையில்  போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai