அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்ற பிரசார பேரணி

திருவாரூரில் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்ற பிரசார பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 


திருவாரூரில் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்ற பிரசார பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். ஜீவானந்தம், நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணன் ஆகியோருடன் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் இந்த பிரசார பேரணியில் பங்கேற்றார். திருவாரூர் கீழவீதியில் தொடங்கிய பிரசார பேரணி, நேதாஜி சாலை, கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு திறந்தவேனில் நடிகை விந்தியா பிரசாரத்தை நிறைவு செய்து பேசியது: தமிழகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு ஏதாவது ஆபத்து வராதா என மு.க. ஸ்டாலின் காத்துக் கிடக்கிறார். அவரது எண்ணம் என்றும் நிறைவேறாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியால் மக்கள் ஆதரவுடன் எடப்பாடியார் தனது ஆட்சியை தொடர்வார். மத்தியில் ஆளும் மோடியால் இந்தியா பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பான வல்லரசு இந்தியாவை உருவாக்க அனைவரும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் நடிகை விந்தியா.
கூத்தாநல்லூரில்...
 கூத்தாநல்லூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, நடிகை விந்தியா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணனுக்கும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்துக்கும் இரட்டை இலை சின்னத்தில், வாக்குச் சேகரித்து, லெட்சுமாங்குடி பாலம் அருகே அவர் பேசியது: இந்தத் தேர்தல் இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் நடைபெறும் யுத்தமாகும். இந்த யுத்தம் இன்றைக்கு நேற்றல்ல, 47 ஆண்டுகால யுத்தம். இந்த யுத்தத்தில் இதுவரை 32 ஆண்டுகள் உதயசூரியனை இரட்டை இலை தோற்கடித்துள்ளது. 
ஜெயலலிதா வழியில் நடைபெறும் அதிமுக ஆட்சியைக் கலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, ஜெயலலிதாவுக்கு வெற்றியைக் காணிக்கையாக்க வேண்டும். ஊழலின் மொத்த உருவமே திமுகதான். பஞ்சபூதத்திலேயும் ஊழல் செய்தவர்கள் திமுகவினர் . நீர் என்றால் சேது சமுத்திரத் திட்டத்தில், நிலம் என்றால் வீராணம் குழாய்த் திட்டம், நெருப்பு என்றால் நிலக்கரி, ஆகாயம் என்றால் 2 ஜி ஸ்பெக்டரம் என ஊழலில் சாதனைப் படைத்தவர்கள் திமுகவினர் என்றார் அவர்.
இந்த பிரசாரத்தில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கோரினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com