Enable Javscript for better performance
கோடையில் எள் சாகுபடி: விவசாயிகளுக்கு யோசனைகள்- Dinamani

சுடச்சுட

  

  கோடைப் பருவத்தில் எள் சாகுபடி செய்து குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 
  இதுகுறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆ. ராஜேஷ்குமார், மு. ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் எள் சாகுபடி மானாவாரி, குளிர்காலம் மற்றும் இறவை பட்டத்தில் பயிரிடப்படுகிறது. இப்பயிருக்கு அதிக நீர் தேவையில்லை என்பதுடன் அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய சக்தியும் உண்டு. எனவே. கோடைப் பருவதில் பயிரிடுவதற்கு ஏற்ற பயிராக எள் சாகுபடி உள்ளதால், இதை விவசாயிகள் சாகுபடி செய்து சரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற ஆலோசனை வழங்கப்படுகிறது. 
  இப்பயிரை (இறவைப்பட்டம்) மாசி - பங்குனி (அ) சித்திரையில் டிஎம்வி 3,4,5 மற்றும் விஆர்ஐ (எஸ்விபிஆர்) 1, விஆர்ஐ (எஸ்விபிஆர்) 2, விஆர்ஐ 1, டிஎம்வி (எஸ்விபிஆர்) 7ஆகிய ரக விதைகளை சாகுபடி செய்யலாம். டிசம்பர் - ஜனவரி மாத நெல் தரிசில் விஆர்ஐ (எஸ்விபிஆர்) 1 ரக விதையை பயிரிடலாம். ஏக்கருக்கு 2 கிலோ எள் விதையை மணலுடன் கலந்து சீராகத்தூவி விதைக்கலாம் அல்லது ஏக்கருக்கு 1.5 கிலோ விதையை வரிசை பயிராக விதைக்கலாம். 
  விதை நேர்த்தி மற்றும் நுண்ணூட்டம் இடுதல்: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா,  1 பாக்கெட் அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்கலாம். விதை நேர்த்தி செய்த விதைகளை பூசணக் கொல்லியுடன் விதை நேர்த்தி செய்வதை தவிர்க்கவும் (அல்லது) ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் (அ) 2 கிராம் கார்பன்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்களை தடுக்க முடியும். அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தில் கால் பாகத்தை குறைத்துக்கொள்ளலாம். மாங்கனீஸ் சல்பேட் 2 கிலோ ஒரு ஏக்கருக்கு 20 கிலோ மணலுடன் கலந்து நுண்ணூட்ட சத்துக்கு தூவ வேண்டும். 
  உர நிர்வாகம்: மண்ணில் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை அதிகரிக்கவும், ஈரத்தன்மையை தக்க வைக்கவும் தொழு உரமிடுவது அவசியம். கடைசி உழவின்போது மக்கிய தொழு உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் இடவும். வேண்டும். எள் பயிறுடன் போட்டி போட்டுக்கொண்டு வளர்வது களைகள்தான். இவை பயிருக்கு இடக்கூடிய இடுபொருள்களை கொண்டு நன்கு வளர்ந்து, பயிரை பெரிதும் பாதிக்கச் செய்யும். இவ்வகை களைகளை எள் விதைத்த 40 நாள்கள் வரை கட்டுப்படுத்தினாலே போதும் பயிரின் விளைச்சல் அதிகமாக இருக்கும். எள் விதைத்த 3-ஆம் நாள் மண்ணில் ஈரம் இருக்கும் தருணத்தில் ஆலக்குலோர் 500 மில்லி ஏக்கருக்கு என்ற விகிதத்தில் மண்ணில் கலந்தோ அல்லது கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தாலோ களைகளைப் பெரிதளவு கட்டுப்படுத்திவிடலாம். எள் விதைத்த 15 நாள்கள் கழித்து செடிக்கு செடி 15 செ.மீ இடைவெளி இருக்கும் படியும், பின் 10 நாள்கள் கழித்து வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளி இருக்கும் படி பயிர்களை களைத்துவிட வேண்டும் 
  பலன்கள்: செடிகளுக்கு காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் அதிகமாக கிடைக்க வேண்டும். இதனால் செடிகளில் பூக்களும், காய்களும் கிளைகளின் அடிபாகத்திலிருந்தே தோன்றுகிறது. இறுதியாக விளைச்சல் அதிகரிக்கப்படுகிறது. 
  நீர் பாசனம்: எள் பயிருக்கு இரண்டு தண்ணீரே போதுமானது. எள் செடி முளைத்து ஐந்து இலை விடும்போது ஒரு நீர் பாய்ச்சுவதும், பிறகு பூவும், காயும் தோன்றும் பொழுது ஒரு நீர் பாய்ச்சவும். எனவே, எள்ளுக்கு மண்ணின் தன்மையை அறிந்து கொண்டு குறைந்த நீர் பாசனம் செய்வதே சிறந்தது.
  பயிர் ஊக்கி தெளித்தல்: எள் விதைத்த 40 -ஆம் நாள் பிளானோபிக்ஸ் 40 பிபிஎம் (150 மில்லி ஏக்கருக்கு) மற்றும் டிஏபி 1 சதவீத  கரைசலையும் சேர்த்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும். தண்டின் அடிப்பாகத்தில் இலைகள் உதிர்ந்து காணப்படும். தண்டின் மேல் பாகத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும். தண்டில் மத்திய பாகம் வரை காய்கள் மஞ்சள் நிறமாக காணப்படும். தண்டில் கீழ்பாகத்திலிருந்து 10-ஆவது காயை உடைத்து பார்த்தால் நிறம் மாற்றம் காணப்படும் (கருப்பு மற்றும் பழுப்பு நிறம்). வெள்ளை நிற எள்ளுக்கு இது பொருந்தாது.  செடிகளை அடியோடு (வேரை மட்டும் விட்டு) அறுத்த பிறகு செடிகை வட்டமாக ஒன்றின் மீது ஒன்றாக தண்டு வெளியில் தெரியும் படி அடுக்க வேண்டும். அதன் பின் ஐந்தாம் நாள் செடிகளை வெய்யிலில் காய வைத்து, உலுக்கி எள்ளினை பிரித்து எடுக்க வேண்டும்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai