இன்று வாக்குப் பதிவு: மாவட்டத்தில் விரிவான ஏற்பாடுகள்

மக்களவைத் தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு

மக்களவைத் தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி, மாவட்டத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாகை மக்களவைத் தொகுதிக்கான தேர்தலுடன், திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் நாகை மக்களவைத் தொகுதியிலும், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி தஞ்சை மக்களவைத் தொகுதியுடனும்  இணைக்கப்பட்டுள்ளன.
திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,13,541 ஆண், 1,16,384 பெண் மற்றும் 1 இதர வாக்காளர்களும், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,21,747 ஆண், 1,27,446 பெண் மற்றும் 6 இதர வாக்காளர்கள், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,31,879 ஆண், 1,37,255 பெண் மற்றும் 22 இதர வாக்காளர்கள், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,30,902 ஆண், 1,29,008 பெண் மற்றும் 7 இதர வாக்காளர்கள் என மொத்தம் 4,98,069 ஆண் வாக்காளர்கள், 5,10,093 பெண் வாக்காளர்கள், 36 இதர வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 274 வாக்குச் சாவடி மையங்கள், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 282 வாக்குச் சாவடி மையங்கள், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 309 வாக்குச் சாவடி மையங்கள், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 303 வாக்குச் சாவடி மையங்கள் என மொத்தம் 1,168 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 82 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு 606 வாக்குப் பதிவு இயந்திரங்கள், திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு 274 வாக்குப் பதிவு இயந்திரங்கள், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு 282 வாக்குப் பதிவு இயந்திரங்கள், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு 309 வாக்குப் பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 1,471 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 1,168 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
100 மண்டல அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்று வாக்குப் பதிவு முடிந்த பிறகு வரும் வரை அந்த 100 வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தப்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 
வாக்குச் சாவடி தேர்தல் பணியை பொறுத்தவரை, திருவாரூர் சட்டப் பேரவை தொகுதியில் 2, 184 வாக்குப் பதிவு அலுவலர்கள், திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,324 வாக்குப் பதிவு அலுவலர்கள், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,376 வாக்குப் பதிவு அலுவலர்கள், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,496 வாக்குப் பதிவு அலுவலர்கள் என மொத்தம் 6380 வாக்குப் பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில்: மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவல் அலுவலர்கள், மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர், ஒடிசா மாநில சிறப்பு காவல் படையினர், மேற்கு வங்கம் மாநில சிறப்பு காவல் படையினர், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், சிறைத் துறையினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்ட மொத்தம் 2,595 நபர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் 21 சார்பு காவல் ஆய்வாளர்களின் தலைமையில் அதிரடி படைகளும், 38 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 38 அதிரடி படைகளும், 11 துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 11 அதிரடி படைகளும், இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 2 அதிரடி படைகளும், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 அதிரடி படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 மேலும் மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடி மையங்களில் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில், வாக்குச் சாவடிகளில் சாய்வுதளம் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com