பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 21st April 2019 12:59 AM | Last Updated : 21st April 2019 12:59 AM | அ+அ அ- |

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மன்னார்குடி கிளையின் 54-ஆவது ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார்குடி தாமரைக்குளம் மேல்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கிளைத் தலைவர் ந. ராசகோபால் தலைமை வகித்தார்.
இதில், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தால், குடும்பப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வருவாய் கிராமங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலையாரிக்கு கருணை அடிப்படையில் ரூ.3,500 சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஓய்வூதியதாரர்களுக்கு கடன் வழங்குவதற்கான வயது உச்சவரம்பை 80 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கக் கொடியை மூத்த உறுப்பினர் ஆர். ஞானசுந்தரம் ஏற்றிவைத்தார். கிளைச் சங்கத்தின் ஆண்டறிக்கையை சங்கச் செயலர் வை. மகாதேவன் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை பொருளாளர் ரா. பன்னீர்செலவம் சமர்ப்பித்தார். தீர்மானங்களை துணைத் தலைவர் கா. பன்னீர்செல்வம், துணைச் செயலாளர்கள் வீ. கூத்தையன், வி.மீரா, கே.நடராசன் ஆகியோர் முன்மொழிந்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.மாணிக்கம், மாநில பொதுச் செயலர் கே. முத்துக்குமாரவேலு, மாநில பொருளாளர் எ. ஹரிகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர்செ. ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.