ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி எம். செல்வராசு கண்டனம்
By DIN | Published On : 23rd April 2019 09:59 AM | Last Updated : 23rd April 2019 09:59 AM | அ+அ அ- |

டெல்டா மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை அமைக்கும் திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எம். செல்வராசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசும், பெட்ரோலிய அமைச்சகமும் குதிரை வேகத்தில் முயற்சி செய்கின்றன. டெல்டா மாவட்டத்தில் நீரின்றி குளம், குட்டை, ஏரிகள் காய்ந்து வெடித்துக் கிடக்கின்றன. விவசாயத்தில் நம்பிக்கையிழந்து, நேரடி விதைப்பு என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் டெல்டா மாவட்டத்தை மேலும் பாலைவனமாக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆழ்துளை தோண்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.
தேர்தலையொட்டி, இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று கூறிய மத்திய அரசு, தமிழகத்தில் தேர்தல் முடிந்த உடனே 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறு அமைக்கலாம் என்ற ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது
எனத் தெரிவித்துள்ளார்.