திருவாரூர் பழைய, புதிய பேருந்து நிலையங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

திருவாரூரில் பழைய, புதிய பேருந்து நிலையத்துக்கு இடையே பேருந்துகள் இயக்க வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


திருவாரூரில் பழைய, புதிய பேருந்து நிலையத்துக்கு இடையே பேருந்துகள் இயக்க வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
திருவாரூரில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், வணிக நிறுவனங்கள் ஏதும் அங்கு வராததால், பயணிகள் அங்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வந்ததால், பழைய பேருந்து நிலையத்துக்கும் பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. பின்னர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலான பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து, அனைத்துப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட வேண்டும் என்ற திருவாரூர் நகராட்சி அலுவலக அறிவிப்பின்படி தற்போது, அனைத்துப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்றன. இதில், சில பேருந்துகள், பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. சில பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வராமலே ரயில்வே மேம்பாலத்தில் உள்ள பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன. 
இதனால் பயணிகள், பழைய பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரு சிலர் மேம்பாலம் வரை நடந்து வந்து, அங்கு பேருந்து ஏறிச் செல்கின்றனர். எனினும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மேம்பாலம் வரை நடப்பதற்கு சிரமப்பட்டு, பழைய பேருந்து நிலையத்திலேயே நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். 
மேலும் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருப்பதாலும், மேம்பாலம் வரை நடப்பதற்கு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. சில பேருந்துகள் மேம்பாலத்திலேயே பயணிகளை இறக்கி விட்டுச் செல்லும்போது, அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடந்து செல்லவும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நலன்கருதி, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களுக்கு இடையே குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com