ஹைட்ரோ கார்பன்: பசுமைத் தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்த வேண்டும்: பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
By DIN | Published On : 26th April 2019 01:17 AM | Last Updated : 26th April 2019 01:17 AM | அ+அ அ- |

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மீது தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை செயல்படுத்த வேண்டுமென காவிரி பாசன விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி டெல்டாவில் பேரழிவுத் திட்டங்களுக்கு நிரந்தர தடை விதித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சிப்பது தீர்ப்பாயத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனங்கள் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையொட்டி ஆய்வு செய்யவோ அல்லது வாயுவை எடுக்கவோ மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சென்னையில் மே 2-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். மேலும், கிராமங்கள்தோறும் நிலம் கொடா இயக்கம் தொடங்கப்பட்டு, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு நிலம் அளிக்க மறுப்பு தெரிவிப்போம் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.