தேரிலிருந்து தவறி விழுந்து சிவாச்சாரியார் பலி

திருவாரூரில் ஆடிப்பூரத்தை ஒட்டி நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராதவிதமாக தேரில் இருந்து தவறி விழுந்த சிவாச்சாரியார்


திருவாரூரில் ஆடிப்பூரத்தை ஒட்டி நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராதவிதமாக தேரில் இருந்து தவறி விழுந்த சிவாச்சாரியார் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
 திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, கமலாம்பாள் தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் தொடங்கியது. தேரோடும் வீதிகளில் வலம் வந்த பிறகு, சுமார் 8.30 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது. அப்போது, அங்கு தீபாராதனை காட்டும்போது, சிவாச்சாரியார் முரளி (56) தேரிலிருந்து தவறி கீழே விழுந்தார்.
 இதனால் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்  உயிரிழந்தார். திருவாரூர் நகரப் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவாச்சாரியார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் உத்தரவு
திருவாரூரில் தேரில் இருந்து விழுந்த சிவாச்சாரியார் முரளி குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
திருவாரூர் மாவட்டம், தெற்கு சேத்தி நகரத்தில் உள்ள திருவாரூர் அருள்மிகு  தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில், தேர் மேல் சென்று தீபாராதனைக் காண்பிக்கும்போது  சீதாராமன் என்பவரின் மகனான சிவாச்சாரியார் முரளி நிலைதடுமாறி தேரின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். 
இந்தச் செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்த முரளியின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் அருள்மிகு  தியாகராஜ சுவாமி  திருக்கோயில் நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com