பேரிடர் தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவே ஒத்திகை: ஆட்சியர்

பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளவே,  பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்படுகிறது

பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளவே,  பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்தார்.
திருவாரூர்  மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்துக்குள்பட்ட தில்லைவிளாகம் கிராமத்தில் புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு, நிவாரணம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இணையதள தொடர்பு மூலம் ஆட்சியர் த. ஆனந்த் பார்வையிட்டார்.
பின்னர், அவர் கூறியது: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான சென்னை, கடலூர், கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம்  வழங்குவது தொடர்பான ஒத்திகைப் பயிற்சி நடைபெறுகிறது. 
புயல், வெள்ளம் வரும்பட்சத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூலமாக விடப்படும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், அரசுத் துறைகள் மூலம் பாதிப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பதை இந்த ஒத்திகையின் மூலம் சோதிக்கப்படும். இதன் மூலம் புயல், வெள்ளம் தொடர்பான எச்சரிக்கைகளை பொதுமக்களுக்கு எவ்வாறு தெரிவிக்கலாம் எனவும், பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் எனவும் அரசு அலுவலர்களும் அறிந்து கொள்ள முடியும்.   இந்த ஒத்திகை பயிற்சியில் வருவாய்த் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, கடலோர பாதுகாப்புப் படை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட  பல்வேறு துறை சார்ந்த 160 அரசு அலுவலர்களும், 61 காவலர்களும், 15 முதன்மை பாதுகாப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஒத்திகையானது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒரு மாதிரி பயிற்சியே, இது குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றார் ஆட்சியர். 
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) பூஷ்ணகுமார், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பேரிடர் ஒத்திகை...
திருத்துறைப்பூண்டி வட்டம், தில்லைவிளாகம் கிராமத்தில் பேரிடர் ஒத்திகை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு தொடங்கி பகல் ஒரு மணிவரை இந்த ஒத்திகை நடைபெற்றது.  புயல் வெள்ளம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகள் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு, அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவது, கால்நடைகளைப் பாதுகாப்பது, பள்ளிக் குழந்தைகளை மீட்பது மற்றும் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்டு முதலுதவி அளிப்பது போன்ற ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
மேலும், வெள்ள காலங்களில் ரயில் தாண்டவாளத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிப்பது, பாதிப்புக்குள்ளான பயணிகளை மீட்பது போன்றவை குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது.
இதில், மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.புண்ணியகோட்டி தலைமையில் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ராஜன் பாபு, கடலோர பாதுகாப்பு படை காவல் குழுமத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிதீர்த்தான், காவல் ஆய்வாளர் ராஜசேகரன், முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் இனிக்கோ திவ்யன் காவல் ஆய்வாளர் ராஜேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், ஊராட்சிஒன்றிய ஆணையர் சாந்தி, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் ரவி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் 
பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com