தார்ச்சாலைக்கு ஏங்கும் நரிக்குறவர்கள்..!

நீடாமங்கலத்தில் நரிக்குறவர் இன மக்களின் குடியிருப்புப் பகுதியில், தார்ச்சாலை அமைத்து தங்களின்

நீடாமங்கலத்தில் நரிக்குறவர் இன மக்களின் குடியிருப்புப் பகுதியில், தார்ச்சாலை அமைத்து தங்களின் 16 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டுமென அந்த இன மக்கள் வலியுறுத்துகின்றனர். 
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பாசிமணி கோர்ப்பது, எலிகிட்டிகள் தயார் செய்வது போன்றவற்றில் கைதேர்ந்த இவர்கள், தங்களது பொருள்களை திருவிழாக்களிலும், பொதுக் கூட்டங்களிலும், பொது இடங்களிலும் விற்பனை செய்வதும், பச்சை குத்துவது, இதர பொருள்கள் விற்பனை போன்றவற்றிலிருந்தும் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர். முதலில் நீடாமங்கலம் அரசு மருத்துவமனை எதிரில் தற்காலிக கொட்டகை அமைத்து வசித்து வந்த இவர்கள், குடும்ப அட்டைகளைப் பெற்று நீடாமங்கலம் வாசிகளாக மாறினர். பின்னர், தங்கள் இருப்பிடத்தை நீடாமங்கலம் வசமாக்கிக் கொண்ட இவர்களுக்கு, கங்கேயன் நகரம் என்ற இடத்தில் குடியிருப்பு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
அந்த இடத்தில் குடியேறிய நரிக்குறவர்களுக்கு நீடாமங்கலம் பேரூராட்சி மூலம் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தரப்பட்டன. இருந்தபோதிலும், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு வயல் வரப்பிலேயே சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டது. 
இதனால், சாலை வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர்களுக்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, நீடாமங்கலம்  பேரூராட்சி நிர்வாகமும் பல்வேறு இடப்பிரச்னைகளை சமாளித்து, சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தது. ஓரளவுக்கு சாலையும் அமைக்கப்பட்டது. தற்போது அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பெருமழை காலங்களில் தங்கள் குடியிருப்பில் வசிக்க இயலாத சூழ்நிலையில், பழைய தாலுக்கா அலுவலக வளாகத்தையே இருப்பிடமாக கருதி, அங்கேயே தங்கி விடுவதும் நரிக்குறவர்களின் வழக்கம். சாலை வசதி செய்து தரவேண்டுமென அண்மையில் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின்படி நில ஆய்வாளர், வருவாய்த் துறையினர், போலீஸார் அடங்கிய குழுவினர் இட அளவைப் பணியில் ஈடுபட்டனர். 
இதுதொடர்பாக நரிக்குறவர்கள் இன சங்கத் தலைவர் வீரமணி கூறியது: 
 எங்கள் வீட்டுப் பிள்ளைகளும் கல்வி பயில்கின்றனர். நாங்கள் பகல் முழுவதும் வெளியில் சென்று வேலை பார்த்துவிட்டு வீடு திரும்ப நல்ல சாலை வசதியில்லாமல் அவதிப்பட்டுவருகிறோம். ஓரளவிற்கு மண்சாலை இருந்தாலும் மழைக்காலங்களில் மிகுந்த அவதிப்பட வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது.
தரமான தார்ச்சாலை இருந்தால் நாங்கள் கவலையின்றி வேலைக்குச் சென்று வீடு திரும்பி நிம்மதியாக வாழ முடியும். தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் கோரிக்கை குறித்து மனு கொடுத்துள்ளோம். இதன்பேரில் சாலைக்கான இடத்தை அளவிடும் பணி நடந்துள்ளது. விரைவில் தார்ச்சாலை அமைத்து எங்களது 16 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com