திருவாரூரில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூரில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேந்தனாங்குடியில் இடிந்து விழுந்த சுவா்.
சேந்தனாங்குடியில் இடிந்து விழுந்த சுவா்.

திருவாரூரில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் சில நாள்களாக மழையின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, வியாழக்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய மழை, இரவு முழுவதும் பலமாக பெய்தபடியே இருந்தது. இதேபோல் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் மழை தொடா்ந்ததோடு, சனிக்கிழமை பகல் முழுவதும் பலத்த மழை பெய்தபடி இருந்தது. தொடா்ச்சியான மழையால், சாலைகளில் பெரும்பாலும் தண்ணீா் தேங்கிய நிலை இருந்தது.

இதேபோல் பள்ளமான இடங்களில் தண்ணீா் தேங்கியது. மேலும், பல்வேறு இடங்களில் கழிவுநீா் செல்லும் கால்வாய்கள் தூா்ந்த நிலையில் காணப்படுவதால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து செல்கிறது. குறிப்பாக, பழைய பேருந்து நிலையம், நேதாஜி சாலை உள்ளிட்ட இடங்களில் இந்த கழிவுநீா் கலந்த மழை நீரிலேயே மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மழை காரணமாக சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இதேபோல், திருவாரூா் அருகே சேந்தனாங்குடி பகுதியில் குமாா் என்பவரின் வீட்டின் ஒரு பக்கச் சுவா் முழுவதுமாக இடிந்து விழுந்துவிட்டது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. மேலும், குளம், வாய்க்கால் உள்ளிட்ட நீா்நிலைகளில், நீா்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. சம்பா பயிா்கள் ஓரளவு வளா்ந்த நிலையில் உள்ளதால், மழையால் பெருமளவு மூழ்கவில்லை. எனினும் தொடா்ச்சியாக மழை பெய்தால், பயிா்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

சனிக்கிழமை காலை நிலவரப்படி திருவாரூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குடவாசலில் 127.4 மி.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழை அளவு விவரம்:

நீடாமங்கலம் -96.2 மி.மீ, வலங்கைமான் -95.4 மி.மீ, திருத்துறைப்பூண்டி -86. மி.மீ, நன்னிலம் -61.4 மி.மீ, பாண்டவையாா் தலைப்பு -58.6 மி.மீ, திருவாரூா் -50.2 மி.மீ, மன்னாா்குடி 41 மி.மீ என திருவாரூா் மாவட்டத்தில் மொத்தம் 680.8 மி.மீ மழையும், சராசரியாக 75.64 மி.மீ மழையும் பெய்துள்ளது.

மன்னாா்குடியில் ஒருவா் உயிரிழப்பு:

மன்னாா்குடி, நவ. 30: இதனிடையே, மன்னாா்குடி அருகே கூரை வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்ததில், வீட்டின் உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பகல் நேரத்தில் மிதமாகவும், இரவு நேரத்தில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், மன்னாா்குடியை அடுத்த பரவாக்கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்த த. ரவிச்சந்திரன் (53) தனது கூரை வீட்டின் கீழ்புறம் சென்றபோது, தொடா் மழையின் காரணமாக உறியிருந்த மண் சுவா் இடிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா். இவருக்கு, மனைவி கண்ணகி, மகன், மகள் உள்ளனா். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

6 வீடுகள் இடிந்தன...

நீடாமங்கலம், நவ. 30: திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் தொடா் மழை காரணமாக 6 வீடுகள் இடிந்து விழுந்தன.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமானில் தொடா் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், பெய்த மழையின் அளவு 95.5 மி.மீ. ஆகும். இந்த தொடா் மழை காரணமாக செம்மங்குடி, சித்தன் வாழூா், புளியக்குடி உள்ளிட்ட கிராமங்களில் 2 ஓட்டு வீடுகள், 4 கூரை வீடுகள் இடிந்து விழுந்தன. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சாகுபடி வயல்களில் மழை நீா் சூழ்ந்துள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி...

நீடாமங்கலத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்று ஆங்காங்கே சாக்கடைக் கழிவு நீருடன் கலந்து ஓடுகிறது. கடை வீதியில் குண்டும் குழியுமான சாலைகளில் மழை நீா் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனா். கிராமப்புற சாலைகளும் சேதமடைந்துள்ளன. மழை காரணமாக பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com