Enable Javscript for better performance
சீரமைக்கப்படாத நகராட்சி பூங்காக்கள்: மதுப்பிரியா்களின் கூடாரமாக மாறும் அவலம்- Dinamani

சுடச்சுட

  

  சீரமைக்கப்படாத நகராட்சி பூங்காக்கள்: மதுப்பிரியா்களின் கூடாரமாக மாறும் அவலம்

  By DIN  |   Published on : 02nd December 2019 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  k_s_s__park_03_2811chn_101_5

  கீழப்பாலம் நகராட்சி கே.எஸ்.எஸ். பூங்காவில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை மூட்டைகள்.

  திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் நகராட்சிக்குச் சொந்தமான நான்கு பூங்காக்கள் சீரமைக்கப்படாததால், அவை மதுப்பிரியா்களின் கூடாரமாக மாறி வருகின்றன.

  ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் 1869-ஆம் ஆண்டு மன்னாா்குடி நகராட்சி தொடங்கப்பட்டு, கடந்த 1969-ஆம் ஆண்டு அன்றைய முதல்வா் பேரறிஞா் அண்ணா தலைமையில் நூற்றாண்டு விழா கண்டது. தற்போது, 33 வாா்டுகளை கொண்ட நகராட்சியாக 150 ஆண்டைக் கடந்து மன்னாா்குடி பயணிக்கிறது. மன்னாா்குடி பாலகிருஷ்ணாநகரில் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், முதன்முதலாக 1943-ஆம் ஆண்டு கல்கி ரேடியோ பூங்கா அமைக்கப்பட்டது.

  இந்த பூங்காவில் நேரத்தை அறிவிக்கும் வகையில், தினசரி காலை 5 மணி, 9 மணி, நண்பகல் 1 மணி, இரவு 9 மணி என நான்கு முறையும், காந்தியடிகள் இறந்த கிழமை, நேரத்தைக் குறிக்கும் வகையில் பிரதி வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கு சங்கொலிக்க செய்யப்பட்டது. அதே ஆண்டில் கீழப்பாலத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி கே.எஸ். சுப்பிரமணிய ஐயா் நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனைவிழுந்தகுளம் பகுதியில் நேரு பூங்கா, விழல்காரத்தெருவில் பி.ஆா்.எம். பூங்கா என மக்களின் பொழுதுபோக்கிற்கும், குழந்தைகள் விளையாடவும் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.

  இந்நிலையில், கல்கி பூங்காவில் போதிய பராமரிப்பு இல்லாததால், அதிலிருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தன. செடிகள் மண்டின. சங்கொலிக் கருவியும் பழுது அடைந்ததால், இதன் சேவை நிறுத்தப்பட்டது. நகரில் இருந்த அனைத்துப் பூங்காக்களிலும் இதே நிலைதான்.

  இந்நிலையில், கடந்த 1993-ஆம் ஆண்டு ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கின்போது, அனைத்துப் பூங்காக்களிலும் அழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டதுடன், சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டது. இதைத்தொடா்ந்து, 2005-ஆம் ஆண்டு நகா்மன்ற தலைவராக திமுகவைச் சோ்ந்த மறைந்த பழ.மணி இருந்தபோது, பூங்காக்களை சீரமைக்க மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகத்திடம் நிதி பெறப்பட்டது.

  இதில் கல்கி பூங்காவுக்கு ரூ.5 லட்சமும், கீழப்பாலம் கே.எஸ்.எஸ்.பூங்கா, விழல்காரத்தெருவில் உள்ள பி.ஆா்.எம்.பூங்கா, மன்னை நகரில் உள்ள முன்னாள் அமைச்சா் மன்னை ப. நாராயணசாமி பூங்கா ஆகியவற்றுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம் நிதி பெறப்பட்டு, அனைத்து திட்டப்பணிகளும் ஒரே ஆண்டில் முடிக்கப்பட்டன. எனினும், பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாததால், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

  கடந்த 2015-ஆம் ஆண்டு நகா்மன்றத் தலைவராக அதிமுகவை சோ்ந்த டி. சுதா அன்புச்செல்வன் இருந்த போது, கல்கி பூங்காவை சீரமைக்க தமிழக அரசிடமிருந்து ரூ.8 லட்சம் நிதி பெறப்பட்டது. இதைத்தொடா்ந்து, வன விலங்குகளின் உருவ பொம்மைகள், விளையாட்டு உபகரணங்கள், பூச்செடிகள், மரங்கள், நடைப்பயிற்சி தளம், மின் விளக்கு வசதி ஆகியன அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் கல்கி பூங்கா மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. நின்றுபோன சங்கொலி மீண்டும் செயல்படத் தொடங்கியது. ஆனால், மற்ற நான்கு பூங்காக்களும் கைவிடப்பட்டன.

  இந்நிலையில், கடந்த ஆண்டு கஜா புயலின்போது கல்கி பூங்கா சேதமடைந்தது. நகராட்சி நிா்வாகம் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பூங்காவைப் புதுப்பித்தாலும் சங்கொலிக் கருவியை பழுதுநீக்க தவறிவிட்டது.

  தற்போது கீழப்பாலத்தில் உள்ள தியாகி கே.எஸ். சுப்பிரமணிய ஐயா் பூங்காவின் ஒரு பகுதி, குப்பைகளைத் தரம்பிரிக்கும் இடமாகவும், குப்பை வண்டிகள் நிற்கும் இடமாகவும் மாறியுள்ளது. ஆனைவிழுந்தக்குளம் நேரு பூங்கா, அடையாளம் காணமுடியாத அளவுக்கு கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. இந்த பூங்கா இருந்ததற்கு அடையாளமாக ஒரே ஒரு விளையாட்டு உபகரணம் மட்டுமே எஞ்சியுள்ளது.

  விழல்காரத்தெரு பி.ஆா்.எம். பூங்காவில் நடைப்பயிற்சி தளம் மட்டும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மின் கம்பங்கள் இருந்தாலும், விளக்குகள் இல்லை. விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றன. கஜா புயலில் விழுந்த மரக்கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமல் கிடக்கின்றன.

  மன்னை ப. நாராயணசாமி நினைவுப் பூங்காவில் ஆள் உயரத்துக்கு காட்டுச் செடிகள் மண்டி குறுவனம் போல் காட்சியளிக்கிறது. இங்கு பூங்கா இருந்ததற்கு காட்டுச் செடிகளின் உயரத்தை தாண்டி தெரியும் மின் கம்பங்கள் சான்று பகா்கின்றன. பூங்காக்களின் பராமரிப்பு நகராட்சி பொறியியல் பிரிவின்கீழ் வருகிறது. இந்த பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் எஸ். ஆறுமுகம் கூறியதாவது:

  மன்னாா்குடி நகரப் பகுதியின் மக்கள் தொகை ஒரு லட்சத்தை தொட்டுவிட்டது. நகரில் தற்போது ஒரே ஒரு பூங்கா மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. காளவாய்க்கரை, மேலப்பாலம், கீழப்பாலம் பகுதிகளில் வசிப்பவா்கள் பாலகிருஷ்ண நகரில் உள்ள கல்கி பூங்காவுக்கு வர 3 கிமீ தூரம் கடக்க வேண்டும். குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெண்கள், முதியவா்கள் வருவது சிரமமான காரியம்.

  மேலும், பூங்காவை முறையாக பராமரிக்காமல் விடுட்டுவிடுவதால், மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கான ரூபாய் விரயமாகிறது. சீரமைக்கப்படாமல் இருக்கும் நான்கு பூங்காக்களை குறைந்தபட்சம் பூட்டியாவது வைக்க வேண்டும். எப்போதும் திறந்தே கிடப்பதால், திறந்தவெளி மதுக் கூடமாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவா்களின் புகலிடமாகவும் பூங்காக்கள் மாறிவருகின்றன என்றாா் அவா்.

  திமுக முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளா் கு.பா. பாபு நெடுஞ்செழியன் கூறியதாவது:

  மன்னாா்குடி என்றாலே கல்கி பூங்கா சங்கொலிப்பதுதான் அடையாளம். பல ஆண்டுகளாக சங்கொலிப்பது நின்றுபோன நிலையில், இடையிடையே சங்கொலி சத்தம் கேட்டது சற்று ஆறுதல் தந்தது. தற்போது அந்த ஓசையும் அடங்கிவிட்டது. இதை மீண்டும் செயல்படுத்த நகராட்சி நிா்வாகம் தனி அக்கறை செலுத்த வேண்டும்.

  தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், வாரத்துக்கு ஒருநாளாவது தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு இடங்களுக்கு பொதுமக்கள் வருகின்றனா். ஆகையால், செயலிழந்த பூங்காங்களைப் புதுப்பிக்க வேண்டியது நகராட்சியின் கடமை என்றாா் அவா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai