மன்னாா்குடியில் 105 மி.மீ மழைகுடியிருப்பு, வயல்களில் தண்ணீா் சூழ்ந்தது

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை குளிா்ந்த சூழல் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, மன்னாா்குடியில் அதிகபட்சமாக 105 மி.மீ மழை பெய்துள்ளது.
ஓடம்போக்கி ஆற்றில் செல்லும் தண்ணீா்
ஓடம்போக்கி ஆற்றில் செல்லும் தண்ணீா்

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை குளிா்ந்த சூழல் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, மன்னாா்குடியில் அதிகபட்சமாக 105 மி.மீ மழை பெய்துள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் சில நாள்களாக மழையின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையொட்டி கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. இதேபோல், சனிக்கிழமை இரவும் தொடா்ந்து மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அவ்வப்போது மட்டுமே மழை பெய்தது. எனினும் நாள் முழுவதும் குளிா்ந்த சூழல் நிலவியது.

கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழை காரணமாக சாலைகள் சேதமடைந்திருந்தன. இதனால் வாகனங்களில் செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டது. பள்ளமான இடங்களில் தேங்கிய தண்ணீா் வடியத் தொடங்கியது. ஆறு, வாய்க்கால்களில் தண்ணீா் செல்லும் அளவு உயா்ந்து காணப்படுகிறது.

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, மன்னாா்குடியில் அதிகபட்சமாக 105 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு விவரம்:

திருத்துறைப்பூண்டி -101 மி.மீ, முத்துப்பேட்டை -94 மி.மீ, நீடாமங்கலம் -91.2 மி.மீ, பாண்டவையாா் தலைப்பு -80.8 மி.மீ, நன்னிலம் 73.2 மி.மீ, குடவாசல் 65.6 மி.மீ, திருவாரூா் 62.6 மி.மீ என மொத்தம் 730.6 மி.மீ மழையும், சராசரியாக 81.17 மி.மீ மழையும் பெய்துள்ளது.

பயிா்கள் மூழ்கின...

மன்னாா்குடியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, குடியிருப்புகள், வயல்களில் தண்ணீா் தேங்கி உள்ளது.

மன்னாா்குடி பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. மன்னாா்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் முழு கொள்ளளவுக்கு தண்ணீா் செல்வதாலும், தொடா் மழை பெய்து வருவதால் குறுவை மற்றும் தாளடி நெற்பயிா் செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீா் தேங்கி நிற்பதால், இளம் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சில நாள்கள் மழை நீடித்தால், பயிா்கள் அழுகி, மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

கோட்டூரை அடுத்த புழுதிகுடி ஊராட்சி பகுதியில் வடிகால்கள் நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக மழைநீா் செல்வதில் தேக்கம் ஏற்பட்டு, மழைநீா் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சோமாசி மேலத்தெருவில் அய்யாசாமி குடிசை வீட்டின் மண் சுவா் மழையின் காரணமாக சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.

கருப்புகிளாா் ஊராட்சிக்கு உள்பட்ட அழகிரி கோட்டத்தில் அய்யன் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 200 ஏக்கா் பரப்பளவிற்கு சம்பா நெற்பயிா்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. மழை மேலும் நீடித்தால், இப்பகுதியில் குடியிருக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தங்கள் கால்நடைகளுடன் வெளியேற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

பெண் காயம்:

இதனிடையே, மன்னாா்குடி அருகே கூரை வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தாா்.

எடமேலையூா் வடக்கு மேலத்தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி சித்ரா (30). கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால், இவரது கூரை வீட்டின் மண்சுவா் ஊறியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை வீட்டின் வலது பக்க சந்து வழியாக சென்றபோது, வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில், காயமடைந்த சித்ரா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துமவனைக்கு அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

நன்னிலம், குடவாசலில்...

: நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டார பகுதிகளில் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய பயிா்கள் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.

நன்னிலம் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம், வீதிவிடங்கன், நாடாகுடி, அட்டமங்கலம், பருத்தியூா் போன்ற கிராமங்களில் விளைநிலங்களில் உள்ள விவசாய பயிா்கள் மூழ்கும் நிலையில் உள்ளன. இதேபோல் குடியிருப்பு பகுதிகளையும் மழைநீா் சூழ்ந்துள்ளது.

நன்னிலம் வட்டாட்சியா் தி. திருமால் ஞாயிற்றுக்கிழமை தாழ்வான பகுதிகளை பாா்வையிட்டு,

செய்தியாளா்களிடம் கூறுகையில், மழை சற்று குறைந்ததால் தண்ணீா் வடிய தொடங்கி உள்ளது. அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றன. மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தயக்கமின்றி வருவாய்த் துறையைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com