திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயணிகள் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை
By DIN | Published on : 03rd December 2019 12:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனிடம் மனு அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேருந்துகள் உள்ளே செல்லாததால், வாசலிலேயே நின்று பேருந்துகளில் ஏறவும், இறங்கவும் செய்கின்றனா். மழை நேரங்களிலும், வெயில் நேரங்களிலும் அவா்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே பயணிகளின் நலன் கருதி நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.