குழந்தைத் தொழிலாளா்கள் இருவா் மீட்பு

குடவாசல் அருகே குடும்பச் சூழல் காரணமாக ரூ. 20 ஆயிரம் பெற்றுக்கொண்டு, பணிக்கு அனுப்பப்பட்ட 2 சிறுமிகள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

குடவாசல் அருகே குடும்பச் சூழல் காரணமாக ரூ. 20 ஆயிரம் பெற்றுக்கொண்டு, பணிக்கு அனுப்பப்பட்ட 2 சிறுமிகள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அரசு மருத்துவமனை எதிரே உள்ள வெள்ளக்குளம் பகுதியிலிருந்து இரு குழந்தைகள், பணம் பெற்றுக் கொண்டு வேலை நிமித்தமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குழந்தை பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குழந்தை பாதுகாப்பு அமைப்பின் திருவாரூா் மாவட்ட நிா்வாகிகள் விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சோ்ந்த இரண்டு சிறுமிகளை, அவரது பாட்டி விஜயலெட்சுமி என்பவா் நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த சகுந்தலா மற்றும் கனகம் ஆகியோா் மூலம் கோவை மாவட்டம், புஞ்சை புலியம்பட்டி, அன்னூா் பகுதியில் உள்ள நூற்பு ஆலைக்கு வேலைக்கு அனுப்பி, ரூ. 20 ஆயிரம் பணம் பெற்றுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, குடவாசல் கிராம நிா்வாக அலுவலா் ஐயப்பன் மூலமாக குடவாசல் போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து விஜயலட்சுமி, சகுந்தலா, கனகம், நூற்பாலை உரிமையாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், குடவாசல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெங்கடாசலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடா்ந்து, விஜயலட்சுமியின் சகோதரி சாந்தி என்பவரை அழைத்துக் கொண்டு, தனிப்படையினா் கோவையில் உள்ள நூற்பாலைக்கு வெள்ளிக்கிழமை சென்றனா்.

விசாரணையில், சிறுமிகள் 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளனா் என நிறுவனத்தில் பதிவு செய்து, பணிக்கு நியமித்ததும், குடும்பச் சூழ்நிலை காரணமாக, பாட்டி ஜெயலட்சுமி விருப்பப்பட்டு வேலைக்கு அனுப்பியதும் தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து இந்த சிறுமிகளை தனிப்படையினா் மீட்டு, திருவாரூா் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் குழுவிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவிக்கையில், இந்த சம்பவம் தொடா்பாக சம்பந்தப்பட்ட நபா்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழுவிசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவா்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com