நீடாமங்கலம் ரயில்வே கேட் பிரச்னைக்குத் தீர்வு

நீடாமங்கலத்தில் தினமும் அதிக நேரம் ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புக்கு

நீடாமங்கலத்தில் தினமும் அதிக நேரம் ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புக்கு மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி தீர்வு காண்பதாக நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால் தெரிவித்துள்ளார்.
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்ஸ்ரேஸ்தா திங்கள்கிழமை திருவாரூர் வந்தார். அப்போது அவருடன் வந்திருந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம், நீடாமங்கலம் ரயில்வே கேட் பிரச்னை குறித்து பயணிகள் கேள்வி எழுப்பியபோது, மன்னார்குடி- கோயமுத்தூர் செம்மொழி விரைவு ரயில் என்ஜின் மாற்றப்படுவதால் ஏற்படும் தாமதத்துக்கு ரயில்வே சார்பில் ஒன்றும் செய்ய இயலாது என்றார்.
இந்த விவகாரம் குறித்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால் வெளியிட்ட அறிக்கை:
நீடாமங்கலம் ரயில்வே கேட் பிரச்னை குறித்து ரயில்வே அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் தீர்வு காண முயற்சிப்பேன். மேலும், காலை 8 மணிக்கு முன்பு திருவாரூரில் இருந்து திருச்சிக்கும், அதேபோல் மாலை 4 மணிக்கு பிறகு திருச்சியில் இருந்து திருவாரூர் மார்க்கத்திலும் ரயில் வசதி ஏற்படுத்தி தரவும் தீவிர முயற்சி எடுத்து வருகிறேன். பேரளம்- காரைக்கால் அகல ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதேபோல், திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் விரைவில் முடிந்து, ஏப்ரல் மாதத்துக்குள் ரயில் சேவையைத் தொடங்க தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com