சுடச்சுட

  

  உளுந்து சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

  By DIN  |   Published on : 13th February 2019 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், நிக்ரா தத்து கிராமமான கீழப்பட்டு கிராமத்தில் உளுந்து சாகுபடியில் நவீன வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அண்மையில்  நடைபெற்றது.
  இப்பயிற்சிக்கு வேளாண்மை விரிவாக்க உதவிப் பேராசிரியர் எம். ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார்.  மண்ணியல் உதவிப் பேராசிரியர் அ. அனுராதா உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசியது:
  விதை நேர்த்தி ஒரு கிலோ உளுந்து விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும். அதன் பிறகு,  ஓர் ஏக்கர் விதைக்கு 200 கிராம் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டிரியா 200 கிராம் உடன் ஆறிய அரிசிக் கஞ்சி கலந்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். பயனுள்ள ரைசோபியம் பாக்டிரியாக்களை பூசண மருந்து கலந்த விதையுடன் கலக்கக் கூடாது என்றார்.
  மேலும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து அவர் பேசும்போது, "இறவைப் பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ தழைச்சத்து, 20  கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து மற்றும் 8 கிலோ கந்தக சத்து இட வேண்டும். இறவைப் பயிருக்கு டிஏபி 2 சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும், பின்பு 15 நாள்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். பயறு ஒன்டர் ஏக்கருக்கு 2 கிலோ பூக்கும் பருவத்தில் தெளிப்பதன் மூலம் பூக்கள் உதிர்வது குறைந்து, வறட்சியை தாங்கி விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றார்.
  இந்த பயிற்சியில் திட்ட உதவியாளர் தே. ரேகா, நிக்ரா திட்ட முதுநிலை ஆராய்ச்சியாளர் வீ. விஜிலா ஆகியோர் பங்கேற்று செயல்விளக்கம் அளித்தனர். இதில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு ஆடுதுறை 5 என்ற உளுந்து ரகம்  வழங்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai