அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: உடனுக்குடன் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காதவாறு

நீடாமங்கலம் பகுதியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காதவாறு, விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் வேளாண்மைக் கோட்டப் பகுதிகளில் சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில்,  அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் சுமார் 600 நெல் மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. 
இதனால், விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவரும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யமுடியாமல், நெல் மூட்டைகளுடன் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அத்துடன், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லுக்கு ரொக்கத் தொகை நேரடியாக வழங்காமல், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவது பாதுகாப்பானதுதான் என்றாலும், வங்கிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல்களில் விவசாயிகள் தங்கள் பணத்தை பெற சிரமப்படும் நிலையும் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் அறுவடைப் பணிகளில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டச் செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினருமான வி.எஸ். கலியபெருமாள் விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் கொள்முதல் செய்திட வேண்டும். கொள்முதலில் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும். சாக்கு தட்டுப்பாடில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும்போது சரியான எடையில் கொள்முதல் செய்ய வேண்டும். காலதாமதம் செய்யாமல் உடனடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும். 
தமிழக அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இல்லையெனில் விரைவில் மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com