கோ. நம்மாழ்வார் மணிமண்டப விவகாரம்: தமிழக அரசுக்கு கண்டனம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாருக்கு தஞ்சையில் மணிமண்டபம் அமைப்பது குறித்து

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாருக்கு தஞ்சையில் மணிமண்டபம் அமைப்பது குறித்து சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படாததற்கு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில், திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து எந்த முடிவும் அறிவிக்காதது, தமிழக அரசு இத்திட்டத்துக்குத் துணைபோகிறதோ? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. 
மேலும், சட்டப் பேரவையில்  உறுப்பினர் தமிமுன் அன்சாரி தவிர்த்து, மற்ற உறுப்பினர்கள் இதுகுறித்து பேச மறுப்பது வேதனையளிக்கிறது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த தொகுதியில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களின் உணர்வை சட்டப் பேரவையில் எடுத்துரைக்காமல் தவிர்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. பென்னி குயிக் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதையும், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஏ.டி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம்.
அதேவேளையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாருக்கு தஞ்சாவூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அதற்கான முடிவை எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தமிழக அரசு இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடாததைக் கண்டிக்கிறோம். இது சர்வதேச இயற்கை ஆர்வலர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.
இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில், பிப்ரவரி 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை பிரஸ் கிளப் கூட்ட அரங்கில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகளின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும். மேலும், விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து நிழல் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம்.
மத்திய அரசு தனது கொள்கைப்பூர்வமான பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயற்சிக்கிறது. குறிப்பாக, ஐரோப்பா உள்ளிட்ட விவசாய உற்பத்தி நாடுகளோடு ஒப்பிடும்போது உற்பத்திச் செலவு இந்தியாவில் பல மடங்கு  கூடுதலாக உள்ள நிலையில், லாபகரகமாக விலையைப் பெற முடியாது. மத்திய அரசின் பொருளாதார கொள்கை நிலையைப் பொருத்தமட்டில், விவசாயிகள் தாங்களே விலையை நிர்ணயம் செய்ய முடியாது என்பதை உணர வேண்டும் என அதில் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com