நீதிமன்ற வளாகத்துக்குள் இளைஞர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
By DIN | Published On : 20th February 2019 09:17 AM | Last Updated : 20th February 2019 09:17 AM | அ+அ அ- |

திருவாரூர் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று, வழக்குத் தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஒருவரை போலீஸார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் அருகே உள்ள ராதாநஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் ராஜாஜி (22). இவர், அந்தப் பகுதியில் சாராயம் விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், தினமும் மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில், தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வருவதாக ராஜாஜி உள்ளிட்ட 3 பேர் மீது தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக அவரை நீதிமன்றத்துக்கு வெளியே கைது செய்ய முயன்றபோது, ராஜாஜி நீதிமன்ற வளாகத்துக்குள் ஓடிவிட்டாராம். இதனால், போலீஸார் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று, ராஜாஜியை கைது செய்தனராம்.
இதுகுறித்து குற்றவியல் நீதிபதி குமாரிடம் புகார் தெரிவித்ததையடுத்து, நீதிபதி போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ராஜாஜிக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதாகவும், ராஜாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.