முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மகா சிவராத்திரி: வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
By DIN | Published On : 28th February 2019 06:00 AM | Last Updated : 28th February 2019 06:00 AM | அ+அ அ- |

மகா சிவராத்திரியையொட்டி, கூத்தாநல்லூர் அருகேயுள்ள வேளுக்குடியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோயிலில் திங்கள்கிழமை (மார்ச் 4) சிவராத்திரியன்று காலை 9 மணிக்கு மகா கணபதி யாகத்துடன் தொடங்கி, லலிதா மூலமந்திர யாகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, அம்பாள் வீதியுலா, பள்ளிக் குழந்தைகளுக்கு ஓம் சக்தி எழுத்துப் போட்டியும் நடத்தப்பட்டு, கொடியேற்றி, காப்புக் கட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இரவு 11 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, நள்ளிரவு 1 மணிக்கு இருளன் மற்றும் பெரியாச்சி புறப்பாடு நடைபெறுகிறது. 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு சக்தி கரகம் எடுத்து ஊர்வலம் நடைபெறுகிறது. அப்போது, அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
தொடர்ந்து, அகோர வீரபத்திர சுவாமி கோயிலை சுற்றி வந்தவுடன், மதியம் 2 மணிக்கு விஸ்வரூபத்தில் மயான ருத்திரராய் மயானத்துக்குச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6 மணிக்கு பால் காவடி, செடில் காவடிகள் எடுக்கப்பட்டு, கோயிலை வந்தடைந்ததும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படும். 3-ஆம் நாளான புதன்கிழமை காலை 9 மணிக்கு அக்னி கப்பரை எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து, அம்பாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இரவு புஷ்ப ரதத்தில் அம்பாள் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். இத்தகவலை கோயில் பூசாரிகள் சங்கர், சதீஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சடையப்ப பூசாரி பரம்பரையினர் டாக்டர் வி.எஸ். ரமேஷ்குமார்,வி.எஸ். ராஜீ, சரபோஜி உள்ளிட்டோர் மேற்கொண்டுள்ளனர்.