முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: ஆட்சியர்
By DIN | Published On : 28th February 2019 06:01 AM | Last Updated : 28th February 2019 06:01 AM | அ+அ அ- |

பொதுமக்களின் பட்டா, சிட்டா, பெயர் மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் அறிவுரை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள அதம்பார் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் மேலும் அவர் பேசியது: தமிழக அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிறக்கும் குழந்தைக்கு ரூ. 12 ஆயிரம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. அங்கன்வாடிகளில் இளம் குழந்தைகளுக்கு சத்தான உணவு, பள்ளி மாணவர்களுக்கு தேவையான விலையில்லா சீருடை, புத்தகம், மிதிவண்டிகள், மடிக்கணினி, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழில்முனைவோர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்து வருகிறது. வருவாய் துறையினர் பட்டா, சிட்டா, பெயர் மாற்றம் தொடர்பான கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதுபோன்ற மக்கள் நேர்காணல் முகாம் மூலம் தமிழக அரசின் திட்டங்களை எவ்வாறு பெற வேண்டுமென்றும், எங்கு பெற வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பொது மக்கள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றன என்றார் ஆட்சியர் த. ஆனந்த்.
முகாமில், 24 பேருக்கு ரூ. 24 ஆயிரம் முதியோர் உதவித்தொகை, 42 பேருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனைகள், 9 பேருக்கு பட்டா மாற்ற ஆணை, 10 பேருக்கு ரூ. 36,728 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம், 18 பேருக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் ரொட்டேட்டர், ஆயில் இன்ஜின், பவர் டில்லர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் என மொத்தம் ரூ. 11,65,668 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, கோட்டாட்சியர் முருகதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால்துரை, வட்டாட்சியர் பரஞ்சோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.