பள்ளியில் ஆண்டு விழாவை காணச் சென்றவர்கள் மீது தாக்குதல்: 4 பேர் கைது
By DIN | Published On : 28th February 2019 06:00 AM | Last Updated : 28th February 2019 06:00 AM | அ+அ அ- |

திருவாரூர் அருகே பள்ளி ஆண்டு விழாவை காணச் சென்ற இருவர் மீது தாக்குதல் நடத்தியதாக 4 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (18), மாதவன் (20) ஆகிய இரண்டு பேர், ஆண்டு விழாவைப் பார்ப்பதற்காக பள்ளிக்குள் நுழைந்தார்களாம். இந்நிலையில், பள்ளியின் பாதுகாவலர் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜன் (63) இருவரையும் பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கவில்லையாம். இதையடுத்து, இருவரும் இரும்பு கம்பியால் நாகராஜனை தாக்கினார்களாம்.
இதேபோல், நாகராஜனுக்கு ஆதரவாக பள்ளியின் வேன் ஓட்டுநர் செருகளத்தூரைச் சேர்ந்த சசிக்குமார் (43), உடற்கல்வி ஆசிரியரான பெரும்புகலூரைச் சேர்ந்த ஜெயராமன் (29), பெரும்புகலூரைச் சேர்ந்த ஜெகன்ராஜ் (22), கலைவாணன் (19) ஆகியோர் சூர்யா, மாதவன் ஆகிய இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டினார்களாம். இதில் காயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சூர்யா, நாகராஜன் ஆகிய இருவரும் தனித்தனியே அளித்த புகாரின்பேரில், திருவாரூர் வட்ட போலீஸார் வழக்குப் பதிந்து சசிக்குமார், ஜெயராமன், ஜெகன்ராஜ், கலைவாணன் ஆகிய நால்வரைக் கைது செய்தனர்.