சுடச்சுட

  

  திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா, சிறப்பாக நடைபெற்றது.
   சமத்துவப் பொங்கல் விழாவையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை, சேலை, தாவணி உள்ளிட்ட உடைகளில் மாணவ, மாணவிகள் வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, மாணவ, மாணவிகளும், பேராசிரியர்களும் பாரம்பரிய உடைகளில் வந்திருந்தனர்.
  கல்லூரி வளாகம் முழுவதும் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, வணிக நிர்வாகவியல் துறை, வரலாற்றுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை வாரியாக தனித்தனியாக சமத்துவப் பொங்கலை வைத்திருந்தனர். இவர்கள் கிராமப்புறம், பாரம்பரிய உணவு வகை, இயற்கை உணவு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களைக் கொண்டு சமத்துவப் பொங்கல் வடிவமைப்பு செய்திருந்தனர்.
  மேலும், கல்லூரியின் விளையாட்டரங்கில் இளவட்டக்கல் தூக்குதல், உறியடித்தல், கிடி கிடி தொடர் ஓட்டம், கரும்பு உடைத்தல் உள்ளிட்டவை ஆண்களுக்கும், பந்து ஓட்டம், தண்ணீர் நிரப்புதல், கோலப்போட்டி உள்ளிட்டவை பெண்களுக்கும் நடத்தப்பட்டன. 
  இந்த போட்டிகளில் ஏராளமானோர் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சுற்றிலும் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் அவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கத்தை ஏற்படுத்தினர். 
  இதேபோல் பாரம்பரிய காய்கறிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட உணவு வகைகள், சமத்துவப் பொங்கல் நடைபெறும் இடத்திலும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட இடத்திலும் அரங்குகளாக அமைக்கப்பட்டு வேண்டுவோருக்கு வழங்கப்பட்டன. இதேபோல், பழங்கால விளையாட்டுப் பொருள்கள், பழங்கால பொருள்கள் ஆகியவை அடங்கிய கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.
  முன்னதாக, நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோ. கீதா தலைமை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்தார்.
  பார்வையாளர்களைக் கவர்ந்தவை: தமிழ்த்துறை சார்பில் கிராமப்புற நடப்புகள் என்ற வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது. வாயிலில் அய்யனாராக ஒருவர் அமர்ந்திருக்க, மீன், நண்டு, வாத்து, தாமரை உள்ள குளத்தில் மீன் பிடிக்கிறார் ஒருவர். இதேபோல் கதிரை தலையில் சுமக்கும் பெண், மஞ்சள் அரைக்கும் பெண், சந்தையில் மாட்டை விலை பேசும் இருவர், மரத்தடியில் நடைபெறும் பஞ்சாயத்து, தொட்டில் ஆட்டும் பெண் என மாணவர்கள் உயிரோட்டமான கண்காட்சியை ஏற்படுத்தியிருந்தனர்.
  இதேபோல் இதழியல் துறை மாணவர்கள் கூரைவீடு, பிள்ளையார் கோயில், குளம் ஆகியவற்றை அமைத்திருந்தனர். இரண்டுமே முதல் பரிசு பெற்றது. 
  கணினி அறிவியல் துறை மற்றும் காட்சி வழித் தகவல் தொடர்பியல் துறை ஆகியவை இரண்டாம் பரிசையும், விலங்கியல் துறை மூன்றாம் பரிசையும் பெற்றன.
  முதல்முறை: இக்கல்லூரி வரலாற்றில் முதல்முறையாக இந்த விழா நடைபெறுகிறது. தனியார் கல்லூரிகளைத் தாண்டி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், ஹெலிகேம் பயன்படுத்தி கல்லூரி நிர்வாகம், பதிவு செய்துள்ளது. அடிக்கடி போராட்டங்கள் செய்தே பழக்கப்பட்ட மாணவர்களுக்கும் இந்த விழா மாறுதலைத் தந்திருக்கும் எனவும், அரசு கல்லூரி மாணவர்களும் மிகுந்த திறமைசாலிகளே என்பதை உணரவும் இந்த விழா உதவி புரிந்திருக்கும் என்கின்றனர் கல்லூரி ஆர்வலர்கள்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai