சுடச்சுட

  

  தீண்டாமை, வன்கொடுமைகளை தடுக்க தீவிர நடவடிக்கை: ஆட்சியர்

  By DIN  |   Published on : 12th January 2019 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்க, அரசு தீவிரமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார். 
  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது: 
  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு எதிராக நிகழும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக, 1955-ஆம் ஆண்டு குடிமையியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1989-ஆம் ஆண்டின் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் போன்றவை மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு, மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் (சென்னையைத் தவிர) தீண்டாமையை விட்டொழித்து, பொதுமக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அக்கிராமத்துக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசால் நிதி வழங்கப்படுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015- இன் படி, கலவரங்களால் பாதிக்கப்பட்ட எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தீருதவியாக உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி மற்றும் வீடு, விவசாய நிலம் வழங்கப்படுகிறது. விதவை மற்றும் சார்ந்தோருக்கு அரசு ஊழியர்களுக்கு தரப்படும் அகவிலைப்படியுடன் கூடிய அடிப்படை ஒய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் காக்கும் வகையில் ஏழ்மை நிலையிலுள்ள வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் ஆட்சியர்.
   முன்னதாக, வன்கொடுமை தொடர்பாக விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்புக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
   இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரவிச்சந்திரன், வன்கொடுமை தடுப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆடலரசன்,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான் ஜோசப், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai