சுடச்சுட

  

  பரக்கலக்கோட்டை கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பகல் நேர தரிசனம்: பொங்கல் தினத்தன்று நடைபெறுகிறது

  By DIN  |   Published on : 12th January 2019 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள  ஸ்ரீ பொதுவுடையார் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் பகல் நேர தரிசனம் தைப்பொங்கல் பண்டிகை தினமான செவ்வாய்க்கிழமை (ஜன.15) நடைபெறுகிறது.
  முத்துப்பேட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டையில் ஸ்ரீ பொதுவுடையார் கோயில் உள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்களிடையே பிரசித்துப்பெற்ற கோயிலாக விளங்கும் இத்தலம், தென் சிதம்பரம் , தென் தில்லை என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் சிவனடியார்கள் ஸ்ரீவானுகோபர், ஸ்ரீமகாகோபர் ஆகிய இருவரிடையே இறைநிலையை அடைய இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா? என பிரச்னை எழுந்தபோது, தில்லை ஸ்ரீ நடராஜர் சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜையை முடித்துக்கொண்டு, இத்தலத்தில் எழுந்தருளி, இறைநிலையை அடைய இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தவழிதான் என இருவரிடையே மத்தியஸ்தம் செய்து வைத்ததால்,  இக்கோயில் மூர்த்தி ஸ்ரீமத்தியபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
  இக்கோயிலில் பிரதி வாரம் திங்கள்கிழமை நள்ளிரவில் மட்டுமே நடைதிறக்கப்பட்டு, நள்ளிரவு பூஜை மட்டுமே நடைபெறுவது வழக்கம். பகல் நேரங்களில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், கோயிலின் பிரதான வாசலில் உள்ள கதவில் மாலைகளை சார்த்திவிட்டு, வெளியில் நின்று வழிபடுவார்கள். ஆண்டுதோறும் தைப் பொங்கல் பண்டிகை தினத்தன்று மட்டும் பகல்  நேரத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில் திறக்கப்படும்.
  சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜர் அர்த்தஜாம பூஜையை முடித்துக் கொண்டு, இத்தலத்துக்கு எழுந்தருளுவதாக ஐதீகம். இக்கோயிலில் கார்த்திகை சோம வார வழிபாடு பிரதானமாகும். விவசாயிகள் தங்கள் வயல்களில் விளையும் முதல் அறுவடை நெல், உளுந்து, பயறு வகைகள், தேங்காய், எலுமிச்சை, மாங்காய் என அனைத்து வகை விளைபொருள்களையும்  கார்த்திகை மாதம் நான்கு சோம வார தினங்களிலும் காணிக்கையாகச் செலுத்தி வழிபடுவர்.
  ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தைப்பொங்கல் அன்று நடைபெறும் பகல் நேர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
  மேலும்,  திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளிலிருந்து  100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
  இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சை மண்டல இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை இணைஆணையர் க.தென்னரசு,  உதவி ஆணையர் செ. சிவராம் குமார்ஆகியோர் மேற்பார்வையில், பரம்பரை அறங்காவலர் சடகோபராமானுஜம், இணை அறங்காவலர் ராமானுஜம், கோயில் செயல் அலுவலர் ஜி. சம்பத்குமார், மேலாளர்ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai