பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாணவர்கள் நடனம் ......

நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் பங்கேற்ற உறியடி, கோலப்போட்டி, பாட்டுப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல், கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவுக்கு, பள்ளி தாளாளர் எஸ். நடராஜன் தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாக இயக்குநர் எம். விக்னேஷ், பள்ளியின் செயலாளர் என். அநிரூபிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். பள்ளியின் முதல்வர் ஜெ. செல்வம் நன்றி கூறினார்.
மன்னார்குடியில்...
மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறை சார்பில், வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் வி. திவாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகள் இயற்கை வேளாண்மை செழிக்க, விளைநிலம் மகிழ்ச்சியில் திளைக்க, தனித்தனியே புது மண்பானை வைத்து, கதிரவனை வணங்கி பொங்கலிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து, பராம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் சீ. அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சூரிய வழிபாடு...
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா தலைமையாசிரியர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது.
 உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணியன் , ஆசிரியர் சங்கச் செயலாளர் முகமதுரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு நடைபெற்றது. மேலும், நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் மாணவியருக்கிடையே கோலப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நூருன், நிர்மலா, உமாமகேஸ்வரி, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் பொ.சக்கரபாணி ஆகியோர் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் வெற்றிச்செல்வி நன்றி கூறினர் .
இதேபோல், பெரியநாயகி நர்சரி தொடக்கப் பள்ளியில் அப்பள்ளி தாளாளர் வை. பக்கிரிசாமி செட்டியார் தலைமையில் நடைபெற்ற  சமத்துவப் பொங்கல் விழாவில், மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
நன்னிலத்தில்...
நன்னிலம் பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில், பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, புடவை அணிந்திருந்தனர். தொடர்ந்து, பொங்கல் கொண்டாட தேவையான புதுப்பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து மற்றும் தேவையான பொருள்களை வாங்கி வந்து கல்லூரி வளாகத்தில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கலை கொண்டாடினர். இதேபோல், நன்னிலம் பகுதி பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. 
பாரம்பரிய உடையணிந்து...
கொரடாச்சேரி ஒன்றியம், பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்துவந்து, கரும்பு, மஞ்சள் கொத்துக்களை வைத்து புதுப்பானையில் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கியபோது, பொங்கலோ பொங்கல் என உவகைப்பூத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com