காரைக்கால் மருத்துவமனையில் இன்று ஜிப்மர் மருத்துவ முகாம்

திருவாரூர் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன்

திருவாரூர் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் ரூ.4.05 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவல் அருகே புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுற்றுவட்டாரங்களிலிருந்து நகர்ப்பகுதிக்கு செல்ல வேண்டுமானால், போக்குவரத்து வசதி குறைவு என்பதால் இந்த பள்ளியே அனைவரது தேர்வாகவும் உள்ளது. பின்னாளில் ஒரு சில மருத்துவ மாணவர்களும், பல பொறியியல் மாணவர்களும் உருவாவதற்கு இந்த பள்ளி காரணியாக அமைந்தது. 1968-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி, நிகழாண்டு பொன் விழாவில் அடியெடுத்து வைக்கிறது. தொடக்கத்தில் உயர்நிலைப்பள்ளியாக இருந்து கடந்த ஆண்டு, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 
புதூர், திருநெல்லிக்காவல், மாரங்குடி, திருத்தங்கூர், கொத்தங்குடி, நமசிவாயபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களிலிருந்து சுமார் 500 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். தொடக்கத்தில் 5-க்கும் மேற்பட்ட ஓட்டுக்கட்டடங்களில் வகுப்பறைகள் நடைபெற்றன. பின்னாளில் கட்டடம் பழுதடைந்ததையடுத்து, அவை இடிக்கப்பட்டு தற்போது 2 கான்கிரீட் கட்டடங்கள் உள்ளன. இதில் அலுவலகமும், வகுப்பறைகளும் நடைபெறுகின்றன. மேலும் 6, 7, 9-ஆம் வகுப்புகளுக்குரிய ஓட்டுக் கட்டடங்களும் பழுது காரணமாக கடந்த ஆண்டு இடிக்கப்பட்டன. எனவே, வகுப்பறை பற்றாக்குறை காரணமாக அந்த வகுப்பினருக்கு மரத்தடியில் பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் உள்ளூரிலிருந்து முன்னாள் மாணவர்கள் சிலர் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் கட்டடம் முறையாக இல்லாதது கண்டு, அவற்றை சரி செய்து தருவது என முடிவெடுத்தனர். அதன்படி, முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைப்பது, அதன் மூலம் பள்ளிக்குத் தேவையான உதவிகள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. 
கடந்த தீபாவளி நாளில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய இவர்கள், முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) குழுவைத் தொடங்கினர். இதன்மூலம் 1968-இலிருந்து 2017 வரை படித்த மாணவர்களில் சிலர் ஒருங்கிணைக்கப்பட்டனர்.  அவர்களிடமிருந்து உதவிகள் வரத்தொடங்கியதையடுத்து, கஜா புயல் வீசுவதற்கு 2 நாள்கள் முன்பு கட்டடம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. கஜா புயலுக்கு பிறகு, மீண்டும் ஒன்று கூடி, கட்டடம் கட்டும் பணியைத் தொடர்ந்து செய்வது என முடிவெடுத்து, கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தனர். இதன் காரணமாக 2 மாதங்களில் ரூ.4.05 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
திறப்பு விழா: இந்த பள்ளிக் கட்டடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் பங்கேற்று, வகுப்பறை கட்டடத்தைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், கல்வியாளர்கள்,  ஊர் பெரியோர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் தெரிவித்தது:
இந்த பள்ளியில் படிப்பவர்கள் அனைவருமே கிராமப்புற மாணவர்கள். தந்தை பயின்று அதன் பிறகு அவரது மகனும் கூட இந்த பள்ளிகளில் படித்துள்ளனர். அப்போதெல்லாம் போக்குவரத்து வசதி குறைவாக இருந்ததால், இந்த பள்ளியே எல்லோருக்குமான வழிகாட்டி. இங்குள்ள மக்களின் வளர்ச்சிக்கு இந்த பள்ளி இன்றியமையாத பங்கு வகிக்கிறது. எனவே, இந்த பள்ளியைச் சீரமைக்க அனைவரும் இணைந்தோம். வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி நண்பர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனைகளுடன், கஜா புயலின் பாதிப்புகளையும் தாண்டி சீரமைக்கும் பணிகள் சிறப்பாகவே நிறைவடைந்துள்ளன. மேலும், பல வளர்ச்சிப் பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் என்றும் பள்ளி நிர்வாகத்தினருடன் உறுதுணையாக நிற்கும் என்றனர்.
வாட்ஸ்அப் குழு ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான சிவக்குமார் கூறியது: 
 இந்த பள்ளி ஊராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ளது. இதனால், கட்டடம் கட்டுவதில் சிக்கல் உள்ளது. அதாவது பள்ளிக் கட்டடங்களைக் கட்டித் தரும் பணிகளை நபார்டு மேற்கொண்டுள்ளது. ஆனால் சொந்தக் கட்டடம் இல்லாததால், அந்த நிதி உதவி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால், இந்த பள்ளிக்கென அருகிலேயே சொந்தமாக இடம் வாங்கித் தர முடிவு செய்துள்ளோம். மேலும், வரும் ஜூன் 30-ஆம் தேதி பொன்விழா ஆண்டு நிறைவடைகிறது. எனவே, அன்றைய தினம், முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்றார். 
கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்பட வேண்டியவை. அந்த வகையில், முன்னாள் மாணவர்களின் இந்தச் செயல், இனிவரும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படவும், சிறப்பான முறையில் கல்வி பயிலவும் பேருதவியாக இருக்கும் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com