மன்னார்குடி மாணவர் விடுதி காப்பாளருக்கு விருது: முன்னாள் மாணவர்கள் வழங்கினர்

மன்னார்குடியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராகப் பணியாற்றியவருக்கு முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்மையில் விருது வழங்கப்பட்டது.

மன்னார்குடியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராகப் பணியாற்றியவருக்கு முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்மையில் விருது வழங்கப்பட்டது.
 மன்னார்குடியில், தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் 1982-ஆம் ஆண்டு வரை தங்கி, பல்வேறு பள்ளிகளில் படித்த வந்த மாணவர்கள் தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒன்றிணைந்து முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த அமைப்பில் உள்ளவர்கள் மன்னார்குடி விடுதியில் தங்கிப் பயின்ற காலத்தில் விடுதிக் காப்பாளராகப் பணியாற்றியவர் யு. கேசவமூர்த்தி. இவர், மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார். இதற்காக, முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் யு.கேசவமூர்த்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், என்.எல்.சி.ஐ. பொது மேலாளருமான கே. மணவாளன் தலைமை வகித்தார். முன்னாள் விடுதிக் காப்பாளர் யு. கேசவமூர்த்திக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. மேலும், விடுதி காவலர் கணேசனுக்கும் நினைவு பரிசு வழங்கினர்.
தொடர்ந்து, "இளைஞர்களின் எதிர்கால சவால்களும், வேலை வாய்ப்புகளும்' என்ற தலைப்பில் பொறியாளர் பி. ராமன், "வெற்றியிலிருந்து மகிழ்ச்சி' என்ற தலைப்பில் பொறியாளர்கள் ஜி. குருமூர்த்தி, மதியழகன் ஆகியோர் பேசினர். பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலர் ஜீ. பூபதி, எல்ஐசி கிளை மேலாளர் ஜி. மதியழகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பின்னர், மாணவர் கூட்டமைப்பில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவுவது, கிராமப்புற மாணவர்களின் கல்விக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்துவது, நூலகம் அமைப்பது, உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
 நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் வி. அன்பழகன், தலைமை ஆசிரியர்கள் வ. கண்ணதாசன், என். பக்கிரிசாமி, சௌந்தராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யு. இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் த. தமிழ்மகன், டிஎன்சிஎஸ்சி அலுவலர் வி.அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com