ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பேரணி

திருவாரூர் அருகே உள்ள திருக்காரவாசல் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து

திருவாரூர் அருகே உள்ள திருக்காரவாசல் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் சார்பில் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் ஊராட்சி பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, திருக்காரவாசலிலிருந்து நாகை மாவட்டம், கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருக்காரவாசலிலிருந்து திருவாரூர் வரை சைக்கிள் பேரணி நடைபெறும் என திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன.
அதன்படி, திருக்காரவாசல் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் பங்கேற்ற பேரணி தொடங்கியது. இப்பேரணிக்கு திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வை. சிவபுண்ணியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
திருக்காரவாசலில் தொடங்கிய பேரணியானது, மாவூர், மாங்குடி, புலிவலம், வாளவாய்க்கால் ரவுண்டானா, ரயில்வே மேம்பாலம், விளமல் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. சைக்கிள் பேரணியில், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே இணைந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் பாலசந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் வடிவழகன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வீ. மோகன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com