2,000 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்: அமைச்சர் ஆர். காமராஜ் வழங்கினார்
By DIN | Published On : 28th January 2019 01:40 AM | Last Updated : 28th January 2019 01:40 AM | அ+அ அ- |

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 2,000 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 76 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபால் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது: தமிழகத்தில் சமூக நலத் துறை சார்பில் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் இந்த திட்டமாகும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து அப்படியே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா முதன்முதலில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகளைப் பெற்றார். அவர் வழியில் தற்போதைய அரசும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.3 லட்சத்து 432 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் பட்டயம் முடித்த 2,000 பயனாளிகளுக்கு நிதியுதவியாக ரூ. 8 கோடியே 7 லட்சமும், ரூ. 4 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தாலிக்குத் தங்கமும் என மொத்தம் ரூ.12 கோடியே 76 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா டார்லிங், வருவாய்க் கோட்டாட்சியர்கள் முருகதாஸ், பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) இருதயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஜெயலலிதா வழியில்...
வலங்கைமானில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அதிமுக சார்பில் நன்னிலம் தொகுதிக்குள்பட்ட 93 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றொரு விழாவில் அவர் பேசியது: திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வருவாய் கிராமங்கள் தவிர அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. விடுபட்ட நன்னிலம் , குடவாசல், வலங்கைமான் பகுதி மக்களுக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையிலும் திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பிலும் 93 ஆயிரம் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் அனுமதியுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை , எளிய மக்களுக்காக வாழ்ந்த தலைவர். அவர் நிறைவேற்றாத மக்கள் நலத்திட்டங்களே இல்லை. ஜெயலலிதா வழியில் எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதா ஆட்சியில் நன்னிலம் , குடவாசல் பகுதிகளில்அரசுக் கலைக் கல்லூரியும், வலங்கைமானில் பாலிடெக்னிக் கல்லூரியும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ஆர். காமராஜ்.
விழாவில், அதிமுக நகரச் செயலர் சா. குணசேகரன், வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக செயலர் சங்கர், கிழக்கு ஒன்றிய துணைச் செயலர் இளவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றம்...
நன்னிலம், பேரளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்டு விடுபட்டவர்களுக்கு வேட்டி, சேலை, துண்டு, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கும் மற்றொரு நிகழ்ச்சியில் பேசியது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் நிவாரணப் பொருள்கள் அரசால் வழங்கப்பட்டது. நன்னிலம் பகுதியில் நிவாரணம் கிடைக்காத பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம் வழங்க முடிவெடுத்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. விவசாய பகுதியான மிகவும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வசிக்கின்ற இந்த நன்னிலம் பகுதியில் அரசினர் கலைக் கல்லூரி உள்ளிட்ட சாலை வசதிகள் குடிநீர் வசதிகள் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன என்றார் அமைச்சர் ஆர். காமராஜ்.
நன்னிலத்தில், அதிமுக நகரச் செயலர் ஆர். பக்ரிசாமி, பேரளத்தில் வடக்கு ஒன்றியச் செயலர் சி.பி.ஜி. அன்பு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால், மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம. குணசேகரன், முன்னாள் ஒன்றியத் தலைவர் எஸ். சம்பத், நன்னிலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராணி சுவாதி கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.