குடிநீர் தட்டுப்பாடு: கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd July 2019 07:41 AM | Last Updated : 03rd July 2019 07:41 AM | அ+அ அ- |

குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மராமத்து பணிகளைத் தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
திருவாரூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றியச் செயலர் கே. புலிகேசி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மன்னார்குடியில்...
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மழைக்காலம் தொடங்கும் முன் மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட வடிகால், வாய்க்கால்கள் மற்றும் குளங்களைத் தூர்வாரக் கோரியும் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் வி.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஜி.ரெத்தனக்குமார், நகர துணைச் செயலர் வி.தனிக்கோடி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், கட்சி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஏ.பார்த்தீபன், ஜி.மீனாம்பிகை, எம்.கலியபெருமாள் கலை.அஸ்வினி, சிவ.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கும்மியடித்து ஆர்ப்பாட்டம்: மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், கலந்துகொண்டவர்கள் காலிக்குடங்களை சாலையின் நடுவில் வைத்து கும்மியடித்து கோரிக்கைகளை பாடல்களாக பாடினர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர்.வீரமணி, மாநில நிர்வாக்குழு உறுப்பினர் மாலா பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாரியப்பன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ப.பாஸ்கரவள்ளி, இளைஞர் மன்ற மாவட்டச் செயலர் துரை.அருள்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க தவறிய தமிழக அரசை கண்டித்தும், கோட்டூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வலியுறுத்தியும், கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வை.சிவபுண்ணியம் தலைமை வகித்தார். இதில், கலந்துகொண்டவர்கள் காலிக்குடங்களுடன் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் ஒன்றியச் செயலர் கே.மாரிமுத்து, துணைச் செயலர் எம்.செந்தில்நாதன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் ஜெ.ஜெயராமன், விவசாய சங்க ஒன்றியச் செயலர் பி.பரந்தாமன், மாதர் சங்க ஒன்றியச் செயலர் ஆர்.உஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களை கோட்டூர் ஒன்றிய திமுக செயலர் பால.ஞானவேல் தலைமையில் அக்கட்சியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
திருத்துறைப்பூண்டியில்...
குடிநீர்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.வி. சந்திரராமன், ஒன்றியச் செயலாளர் அ. பாஸ்கர், நகர செயலாளர் எம்.முருகேசன், முன்னாள் நகர செயலாளர் வி.முத்துக்குமரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, ரயில் நிலையம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தடைந்தனர்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலம், ஜூலை 2: நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன் தலைமை வகித்தார். பெண்கள் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தஞ்சை சாலை பகுதியிலிருந்து ஆர்ப்பாட்டக் குழுவினர் நகரின் பிரதான வீதிகள் வழியாக கோரிக்கை கோஷங்களை எழுப்பியபடி, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வந்தடைந்தனர்.
இதேபோல், வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் த.ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். இதிலும் திரளானோர் கலந்து கொண்டனர்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எம்.சுதர்ஸன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க நகரச் செயலாளர் எம்.சிவதாஸ், நகர செயற்குழு உறுப்பினர் டி. கண்ணையன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பன்னீர்செல்வம், வி.ராஜேந்திரன், மாதர் சங்க நகரத் தலைவர் எஸ்.நீலாவதி, இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் ஏ.பிச்சைமுத்து மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.